நம்முடைய மனநிலையை பாதிக்காத வகையில் கைபேசிகள் இருக்க வேண்டும்-உலக நுகர்வோர் தின விழாவில் நீதிபதி பேச்சு!

எம்பவர் இந்தியா நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம் சார்பில் உலக நுகர்வோர் தின விழா தூத்துக்குடியில் நடைபெற்றது.
தூத்துக்குடியில் எம்பவர் இந்தியா நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம் சார்பில் உலக நுகர்வோர் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு அமைப்பின் கௌரவ செயலாளரும், தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் உறுப்பினருமான ஆ. சங்கர் தலைமை வகித்தார். நிலையான வாழ்க்கை முறைக்கு நியாயமான மாற்றம் என்ற விழிப்புணர்வு பதாகையை இலவச சட்ட உதவி மையத்தின் செயலாளரும், நீதிபதியுமான கலையரசி நீனா வெளியிட்டார்.
தொடர்ந்து, செயலாளரும், நீதிபதியுமான கலையரசி நீனா பேசும்போது,. "மொபைல் செயலி பதிவிறக்கம் செய்யும் நம் ஒவ்வொருவரும் நுகர்வோரே. சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. நாம் பதிவிறக்கம் செய்யும் ஒவ்வொரு செயலியாலும் நமது நேரம், நம்முடைய மனநிலை, நம்முடைய பணம் விரயம் ஆகிறது. செயலி வடிவமைத்தவர்கள் எளிதாக பணம் சம்பாதித்து வருகின்றனர். நுகர்வோர் பதிவிறக்கம் செய்யக்கூடிய செயலி ஒவ்வொன்றிற்கும் அந்த நிறுவனத்திற்கு வருவாய் கிடைக்கிறது.
சமூக வலைதளம் (வாட்ஸ் அப்) வைக்கக்கூடிய ஸ்டேட்டஸ் ஒவ்வொன்றுக்கும் whatsapp நிறுவனத்திற்கு வருமானம் கிடைக்கிறது. ஒரு நுகர்வோராகிய நாம் நம்முடைய நேரம் நம்முடைய உழைப்பு அனைத்தையும் செலவு செய்து வேறு ஒருவருக்கு பணத்தை சம்பாதித்து கொடுத்து வருகிறோம். எனவே தேவையில்லாத செயலிகளை உடனடியாக டெலிட் செய்யுங்கள்.
நம்முடைய மனநிலையை பாதிக்காத வகையில் கைபேசிகள் இருக்க வேண்டும். குறிப்பாக, பெண்கள் அனைவரும் தங்களுடைய கைபேசியில் தேவையில்லாத செயலிகளை பதிவிறக்கம் செய்யாதீர்கள். முகவர்களுக்கு உரிமைகள் இருப்பது போல் கடமையும் உள்ளது. அந்தக் கடமைகளில் ஒன்று உபயோகித்த பிளாஸ்டிக் வீணாக சாலைகளில் வீசக்கூடாது. இந்த உலகம் மனிதனுக்கான மட்டுமல்ல அனைத்து உயிர்களுக்கும் ஆனது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். எனவே நுகர்வோர் ஆகிய நாம் வாங்கிய பொருட்களை பயன்படுத்துவதையும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படாதவாறு பாதுகாக்க வேண்டும்.
பெண்களுக்கு கிடைக்கக்கூடிய உரிமைகள் பணம் இல்லாத காரணத்தால் மறுக்க கூடாது என்பதற்காக அரசு உதவியோடு மாவட்ட நீதி சேவை ஆணையத்தின் மூலம் வழக்குகள் நடத்தலாம் என்றார்.
விழாவில், என்எல்சி தலைமை பொது மேலாளர் அனந்த ராமானுஜம், தேசிய நெடுஞ்சாலைகள் ஆனைய திட்ட இயக்குனர் சிவன் சர்மா, புனித மரியன்னை கல்லூரி செயலாளர் அருட்சகோதரி முனைவர் சிபானா ஆகியோர் கலந்து கொண்டார்கள். கல்லூரி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை ரதி நன்றி கூறினார்.
What's Your Reaction?






