மத்திய பட்ஜெட் 2025-2026 அரசியல் தலைவர்களின் அறிக்கைகள்.!

2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.. இது குறித்து தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகள்..!
நாடாளுமன்ற மக்களவையில் 2025-2026ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (01.02.2025) சனிக்கிழமை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து தமிழ்நாட்டு அரசியல் கட்சி தலைவர்கள் அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், மத்திய பட்ஜெட் என்றாலே தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சனைதானா? தமிழ்நாடு என்ற பெயர்கூட தொடர்ந்து இடம்பெறுவதில்லையே? எத்தனையோ கோரிக்கைகளை முன்வைத்தோமே, அதில் ஒன்றைக்கூடவா உறுதிசெய்து அறிக்கையில் சேர்க்க மனம் வரவில்லை பா.ஜ.க., கூட்டணி ஆட்சியில் உள்ள மாநிலத்துக்கு மட்டும்தான் திட்டங்களும், நிதியும் அறிவிக்கப்படும் என்றால் மத்திய பட்ஜெட் என இதனை அழைக்க வேண்டிய அவசியம் என்ன?
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஏழை, எளிய மக்கள், விவசாயிகள், நடுத்தர மக்கள், தொழில்துறையினர், இளைஞர்கள், தாய்மார்கள், மாணவர்கள் என, அனைத்துத் தரப்பினருக்குமான மிக அற்புதமான, பொதுமக்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது. ஐஐடி-க்களில் கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகள் விரிவுப்படுத்தப்படும். ஆண்டுக்கு, ரூ. 12 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு, வருமான வரி கிடையாது என்ற நமது நிதியமைச்சரின் அறிவிப்பு, நடுத்தர வர்க்கத்தினருக்கு, ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என்றால் மிகையாகாது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பீகார் மாநிலத்திற்கு விரைவில் தேர்தல் வருவதை கருத்தில் கொண்டு அம்மாநிலத்திற்கு மட்டும் பல வளர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளதால், மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை என கூறுவதை விட, பீகார் மாநில வரவு - செலவு நிதிநிலை அறிக்கை என கருதும்படி அமைந்துள்ளது.
தேமுதிக பொதுச்செயலாளர், பிரேமலதா விஜயகாந்த், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டுக்கு ஒன்றிய பட்ஜெட்டில் நிவாரணம் அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு ரூபாய் 1.50 லட்சம் கோடி வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்று சொல்லி இருப்பது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் இந்த பட்ஜெட் ‘யானைப் பசிக்கு சோளப்பொறி” என்ற பழமொழிக்கு ஏற்ப அமைந்துள்ளது.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், வருமான வரி விலக்கிற்கான வருவாய் வரம்பு ரூ.12 லட்சம் வரை அதிகரிக்கப்பட்டிருப்பதும், மக்களின் நலன் சார்ந்து மேலும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பதும் மகிழ்ச்சி. அதேநேரத்தில் தமிழ்நாட்டுக்காக சிறப்புத் திட்டம் எதுவும் அறிவிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ஏழை, எளிய மக்கள், மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள், தொழில்முனைவோர்கள் என அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சியையும் பொருளாதார நிலைத்தன்மையையும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருப்பது அனைத்து வகையிலும் வரவேற்புக்குரியது. மேலும், உயிர்காக்கும் மருந்துகளுக்கு சுங்கவரி ரத்து போன்ற திட்டங்கள் மருத்துவத்துறைக்கு கூடுதல் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நிதிநிலை அறிக்கையில், உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும் உரிய அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றத்தை அளிக்கிறது. வேலைவாய்ப்புகளை அதிகரிக்க உறுதியான செயல்திட்டங்கள் இல்லை. அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களை பகுப்பாய்வு செய்திட தொழில் முனைவோர் நீண்ட காலமாக கோரி வருவதை நிறைவேற்றவில்லை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், ஏழைகளுக்கு எதிராகவும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட எதிர் கட்சிகள் ஆளக்கூடிய மாநிலங்கள் இந்த பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இந்த முறை திருக்குறள் மட்டுமே தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ளது ஆகையால் போன முறையுடன் இந்த முறை தமிழ்நாட்டிற்கு முன்னேற்றம் என கூறலாம். தங்களுக்கு ஆதரவாக இருக்கக்கூடிய பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிக நிதி உதவி அளித்து பட்ஜெட்டில் அறிவித்திருப்பது பாரபட்சமான நிதிநிலை அறிக்கை.
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை, உலகில் ஐந்து நாடுகளில் 20 கோடிக்கும் கீழ் மக்கள் தொகை உள்ளது. 144 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 15 சதவீதம் ஆனால் 25 கோடி பேரை வறுமையில் இருந்து மீட்டு விட்டதாக ஏமாற்றி இருக்கிறார்கள். அவர்களுக்கான எந்த திட்டமும் மத்திய பட்ஜெட்டில் இல்லாதது கானல் நீர் ஆகும்.
தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டிற்கு, ஒன்றிய பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. தமிழ்நாட்டின் பங்களிப்பிற்கு அங்கீகாரம் இல்லை. குறைந்த பங்களிப்பு செய்யும் மாநிலங்கள் அதிக ஆதாயம் அடைந்துள்ளன.
தமிழக வெற்றி கழகத்தலைவர் விஜய், ஆண்டிற்கு 12 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வருமான வரி விலக்கு அளித்திருப்பதை நான் உளமார வரவேற்கிறேன். இதன்மூலம் நடுத்தர மக்களுக்குக் குறிப்பிடும்படியான நிவாரணம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதே சமயம் நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய பெட்ரோல், டீசல் வரிக் குறைப்பு மற்றும் GST வரிக் குறைப்பு எளிமைப்படுத்துதல் பற்றி எந்த ஓர் அறிவிப்பும் இல்லாதது மிகப் பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது.
What's Your Reaction?






