போலீசார் முன்னிலையில் பூச்சி மருந்து குடித்த தம்பதி.!

Feb 1, 2025 - 17:25
Feb 1, 2025 - 17:33
 0
போலீசார் முன்னிலையில் பூச்சி மருந்து குடித்த தம்பதி.!

வல்லநாடு அருகே வீட்டை ஜப்தி செய்ய வந்த போலீசார் முன்னிலையில் பூச்சி மருந்தை குடித்த தம்பதி. கணவர் உயிரிழப்பு. மனைவி உயிரிக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லநாடு பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் லாரி டிரைவரான சங்கரன் (45). இவரது மனைவி பத்ரகாளி(43). இவருக்கு சொந்தமான வீட்டை அடகு வைத்து கடந்த 2020ல்  தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் 5 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். இந்த கடனுக்காக மாதம் தோறும் 11 ஆயிரம் ரூபாய் கட்டி வந்துள்ளார்.

ஆனால் தொடர்ந்து பல மாதங்களாக தவணத் தொகையை செலுத்தாததால் சங்கரன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து பைனான்ஸ் நிறுவனத்தினர் பணத்தை செலுத்தும்படி நெருக்கடி கொடுத்தனர். இதையடுத்து, வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட வேண்டும் என பைனான்ஸ் நிறுவனத்தினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

தவணைத் தொகை செலுத்தாததால் வீட்டை ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, தூத்துக்குடி ரூரல் டி.எஸ்.பி. சுகிர் முன்னிலையில் முறப்பநாடு போலீசார் பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள், வழக்கறிஞர்கள் இன்று காலை 11 மணி அளவில் சங்கரனின் வீட்டை ஜப்தி செய்ய வந்தனர்.

ஜப்தி செய்ய வந்தவர்கள் சங்கரன் வீட்டில் இருந்த அவரையும் அவரது மனைவி பத்திரகாளியையும் வழுக்கட்டாயமாக வெளியேற்ற முயன்றனர். அப்போது வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து வெளியே வந்துள்ளார் பத்ரகாளி. அவர்கள் வெளியே வந்ததும் ஊழியர்கள் பொருட்கள் அனைத்தையும் வெளியே எடுத்து வைத்தனர்.

இதற்கிடையில் கையில் வைத்திருந்த பூச்சிமருந்தை பத்ரகாளி குடித்தார். அப்போது அங்கிருந்த போலீசார் அதை தட்டி விட்டனர். கீழே விழுந்து கிடந்த பூச்சிமருந்தை எடுத்து சங்கரன் குடித்துள்ளார். இதற்கிடையில் பூச்சிமருந்தை குடித்த சங்கரன் மயங்கி விழுந்துள்ளார். விஷம் குடித்த இருவரும் சுமார் 45 நிமிடம் அங்கேயே தவித்துள்ளனர்.

இருப்பினும், போலீசார் முன்னிலையில் வீட்டுக்கு ஜப்தி வைக்கப்பட்டது. இதற்காக வீட்டை பூட்டி நுழைவு வாயில் கேட்டில் சீல் வைத்தனர். இதற்கிடையே, விஷம் குடித்த இருவரின் நிலை மோசமானதால் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.

செல்லும் வழியிலேயே சங்கரன் உயிரிழந்தார். பத்திரகாளிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தம்பதிக்கு 12 ம் வகுப்பு படிக்கும் பானு (18) என்ற மகளும், 10 ம் வகுப்பு படிக்கும் கல்யாணி (16) மகனும் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து முறப்பநாடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow