வீட்டை ஜப்தி செய்ய வந்த அதிகாரிகள் வளர்ப்பு நாயை உள்ளே வைத்து சீல் வைத்தனர்.!

வீட்டை ஜப்தி செய்ய வந்த போலீசார் முன்னிலையில் கணவன் தற்கொலை; மனைவி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி - வீட்டினுள் 3 வளர்ப்பு நாயையும் சேர்த்து அடைத்து வைத்து சீல் வைத்து சென்ற அராஜக அதிகாரிகள்...!
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த லாரி டிரைவரான சங்கரன் (45). இவரது மனைவி பத்திரகாளி(43). இவருக்கு சொந்தமான வீட்டை அடகு வைத்து கடந்த 2020ல் என்ற (APTUS FINANCE) என்ற தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் 5 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். இந்த கடனுக்காக மாதம் தோறும் 11,000 ரூபாய் கட்டி வந்துள்ளார். ஆனால் தொடர்ந்து பல மாதங்களாக வேலை இல்லாமல் தவித்து வந்த சங்கரன் தவணத் தொகையை செலுத்தாததால் சங்கரன் விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து பைனான்ஸ் நிறுவனத்தினர் பணத்தை செலுத்தும்படி நெருக்கடி கொடுத்தனர்.
இதையடுத்து, வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட வேண்டும் என பைனான்ஸ் நிறுவனத்தினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனைத் தொடர்ந்து வீட்டை ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, தூத்துக்குடி ரூரல் டி.எஸ்.பி. சுகிர் முன்னிலையில் முறப்பநாடு போலீசார் பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள், வழக்கறிஞர்கள் இன்று காலை 11 மணி அளவில் சங்கரனின் வீட்டை ஜப்தி செய்ய வந்தனர்.
அப்போது ஜப்தி செய்ய வந்தவர்கள் சங்கரன் வீட்டில் இருந்த அவரது மனைவி பத்ரகாளியையும் வழுக்கட்டாயமாக வெளியேற்ற முயன்றனர். அப்போது அவமானமடைந்த சங்கரன் மற்றும் பத்ரகாளி ஆகியோர் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து வெளியே வந்து கையில் வைத்திருந்த பூச்சிமருந்தை பத்ரகாளி குடித்த நிலையில், அங்கிருந்த போலீசார் அதை தட்டி விட்டனர். கீழே விழுந்து கிடந்த பூச்சிமருந்தை எடுத்து சங்கரன் குடித்துள்ளார். தொடர்ந்து விஷம் குடித்து மயங்கி கிடந்த சங்கரனை மருத்துவமனையில் சேர்க்காமல் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்த போலீசார் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் அவரது வாயில் நுரை தள்ளிய நிலையில் சங்கரன் தவித்தபோது, அவர் நடிப்பதாக அங்கிருந்த போலீசார் "நக்கலாக" கூறியுள்ளனர்.
மேலும் விஷம் குடித்த இருவரும் சுமார் 45 நிமிடம் அங்கேயே எந்த உதவியும் இல்லாமலும் கேட்பாராற்ற நிலையில் அங்கு உயிருக்கு போராடி தவித்துள்ளனர். இருப்பினும், போலீசார் முன்னிலையில் வீட்டுக்கு ஜப்தி வைக்கப்பட்டது. இதற்காக வீட்டை பூட்டி நுழைவு வாயில் கேட்டில் சீல் வைத்தனர். சீல் வைக்கும் போது சங்கரன் வீட்டில் வளர்த்த 3 நாய்களையும் இரக்கமே இல்லாமல் வீட்டோடு சேர்த்து அங்கிருந்த பணியாளர்கள் வீட்டின் உள்ளே வைத்து அடைத்து வீட்டை சீல் வைத்து விட்டுச் சென்றனர்.
தற்போது அந்த 3 நாய்களும் உணவருந்த முடியாமல் வீட்டிற்குள் குரைத்துக் கொண்டு தவித்து வருகிறது. இந்த சம்பவம் அங்கிருப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காலை 11 மணிக்கு நடந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து தற்போது வரை 3 நாய்கள் குரைத்துக் கொண்டே இருக்கிறது. அதை வெளியே கொண்டு வர வழியில்லாமல் தவித்து வருகின்றனர்.
What's Your Reaction?






