காங்கிரஸ் தயவு இல்லாமல் யாராலும் 2026-ல் ஆட்சி அமைக்க முடியாது- தூத்துக்குடி மாநகர மாவட்ட தலைவர் அதிரடி.!

2026 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தயவில்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன் பேசிய பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன் மேற்பார்வையில், தூத்துக்குடி மாநகரில் ஒவ்வொரு வார்டிலும் 1 வார்டு தலைவர், 2 துணைத்தலைவர், 2 செயலாளர், 1 பொருளாளர் மற்றும் 15 செயற்குழு உறுப்பினர்கள் என்று வார்டு கமிட்டி அமைக்கும் பணியானது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தூத்துக்குடியில் வார்டு கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முரளிதரன் பேசுகையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை வார்டு, வார்டாக சென்று வார்டு கமிட்டி மற்றும் பூத் கமிட்டி அமைக்க உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் எந்த கட்சியிலும் இல்லாது காங்கிரஸ் கட்சியில் மட்டுமே தொண்டர்களின் கருத்தறிந்து வார்டு தலைவர் மற்றும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்கள்.
2026 இல் காங்கிரஸ் தயவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. 2026 சட்டமன்றத் தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு மிக, மிக முக்கியமான தேர்தலாகும். மதவாத சக்தி மீண்டும் தமிழகத்தில் தலை தூக்கி விடாத வண்ணம் நம்முடைய கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று பேசினார்.
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தூத்துக்குடி மாநகர மாவட்ட தலைவர் முரளிதரன் எங்கள் தயவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்கிற புதிய கோஷத்தை எழுப்பியுள்ளது தூத்துக்குடி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
What's Your Reaction?






