20 ரூபாய்க்கு பிரியாணி, சுகாதாரமில்லாததால் உரிமம் இடைக்கால ரத்து..!
![20 ரூபாய்க்கு பிரியாணி, சுகாதாரமில்லாததால் உரிமம் இடைக்கால ரத்து..!](https://thupparithal.com/uploads/images/202501/image_870x_6797af03d851a.jpg)
தூத்துக்குடி மாநகரில் பல்வேறு கடைகளில் 20 ரூபாய்க்கு பிரியாணி விற்கப்படும் தரத்தை உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு செய்து உரிமத்தை இடைக்கால ரத்து செய்து உத்தரவு.!
தூத்துக்குடி மாநகரில் 20 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி விற்பனை செய்யப்படுவதாகவும், அவற்றின் தரத்தை பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உணவு பாதுகாப்புத்துறையினருக்கு உத்தரவிட்டார். அதனடிப்படையில், மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையிலான உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள், மாப்பிள்ளையூரணி அருகே உள்ள டேவிஸ்புரத்தில் உள்ள 20 ரூபாய் பிரியாணி கடையின் தயாரிப்புக்கூடத்தினை ஆய்வு செய்தனர்.
அந்த ஆய்வில், பிரியாணிக்குப் பயன்படுத்திய கோழி இறைச்சியில் எந்தவிதமான துர்நாற்றங்களோ, வேற எவ்விதமான இயல்புக்கு புறம்பான அம்சங்களோ கண்டறியப்படவில்லை. இருப்பினும், அதிலிருந்து உணவு மாதிரி எடுத்து, பகுப்பாய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உணவு பகுப்பாய்வு அறிக்கை பெறப்பட்டவுடன் தொடர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அதே வேளையில், உணவு தயாரிப்புக்கூடம் மிகவும் அசுத்தமாகவும், சமைக்கும் பகுதியில் பூனை, நாய் போன்ற பிராணிகளின் நடமாட்டம் அதிகமாக இருந்ததாலும், வாங்கிய மூலப்பொருட்கள் மற்றும் விற்பனை செய்த உணவுப் பொருட்களுக்கு உரிய பில்கள் இல்லாததாலும், உணவு பகுப்பாய்வு அறிக்கைகள் இல்லாததாலும், சமையலறை பாதுகாப்பற்று இருப்பதாலும், பொது சுகாதார நலனை முன்னிறுத்தி, அந்த உணவகத்தின் உணவு பாதுகாப்பு உரிமைத்தினை இடைக்கால ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், உணவு தயாரிப்புக் கூடத்தை சீர் செய்ய முன்னேற்ற அறிவிப்பு வழங்கப்பட்டு, அவற்றை சரி செய்த பின்னர் சம்பந்தப்பட்ட வணிகருக்கு உணவகத்தினை இயக்க அனுமதி வழங்கப்படும். பிரியாணி பொட்டலத்தில் சிக்கன் பீஸ் சிதைந்த துகள்களாக இருப்பதால், “சிக்கன் பிரியாணி” என்ற வாசகம் நுகர்வோரைத் தவறாக வழி நடத்தும் என்பதினால், இதுகுறித்தும், இக்கடைக்கு சிக்கன் விற்பனை செய்த நிறுவனத்திடமும் விசாரணை மேற்கொண்டு, தொடர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் தெரிவித்தார்.
What's Your Reaction?
![like](https://thupparithal.com/assets/img/reactions/like.png)
![dislike](https://thupparithal.com/assets/img/reactions/dislike.png)
![love](https://thupparithal.com/assets/img/reactions/love.png)
![funny](https://thupparithal.com/assets/img/reactions/funny.png)
![angry](https://thupparithal.com/assets/img/reactions/angry.png)
![sad](https://thupparithal.com/assets/img/reactions/sad.png)
![wow](https://thupparithal.com/assets/img/reactions/wow.png)