அரசு கேபிள் டிவி அதிகாரிகள் அராஜக போக்கு.,கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் மனு.!

தூத்துக்குடியில், அரசு செட்டாப் பாக்ஸை பொருத்த அரசு அதிகாரிகள் நிர்பந்தம் செய்கிறார்கள். உடனடியாக மாவட்ட ஆட்சியர் தடுத்து நிறுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மனு அளித்தனர்.!
தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் (Tcoa) சார்பில் மாநிலத் துணைத் தலைவரும், தூத்துக்குடி மாவட்ட தலைவருமான எம்.ஆர் பிரபு, மாவட்ட செயலாளர் கண்ணன், பொருளாளர் ராஜி, ஆகியோர் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.
அம்மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் கேபிள் டிவி ஒரு கோடி வாடிக்கையாளர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. இதில் தமிழகம் முழுவதும் 25 ஆயிரம் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் தொழில் நடத்தி வருகின்றனர். மேற்கண்ட ஆபரேட்டர்கள் அரசு கேபிள் டிவி நிறுவனத்திலும், தனியார் நிறுவனங்களிலும் ஒளிபரப்பு எடுத்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றனர். கடந்த நான்கு ஆண்டு காலமாக அரசு கேபிள் டிவி நிறுவனம் புதிய செட்டாப் பாக்ஸ்களை கொள்முதல் செய்யாத நிலை இருந்து வந்ததாலும், வாடிக்கையாளர்களுக்கு செட்டாப் பாக்ஸ்களை வழங்க இயலாத காரணத்தினாலும் சில மாவட்டங்களில் அரசு கேபிள் டிவி கட்டுப்பாடு அறை இல்லாததாலும், சில இடங்களில் கட்டுப்பாட்டு அறை இருந்தும் பராமரிப்பு இல்லாத காரணத்தினாலும் வாடிக்கையாளர்களுக்கு ஒளிபரப்பு தடைகள் ஏற்பட்டு சரியான ஒளிபரப்பு வழங்கப்பட முடியாமல் அவதிப்பட்ட நிலையில் தனியார் நிறுவனங்களிடம் செட்டாப் பாக்ஸ்களை வாங்கி ஒரு பகுதி வாடிக்கையாளர்களுக்கு வழங்கினார்கள்.
இந்தச் சூழலில் தற்போது தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் 2 லட்சம் பாக்ஸ்களை கொள்முதல் செய்துள்ளதை எங்கள் அமைப்பு வரவேற்கிறது. இந்த பாக்ஸ்கள் தேவை ஏற்படும் போது அரசு நிறுவனத்திடம் சுமார் 500 கொடுத்து வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பொருத்தி வருகிறோம்.
ஆனால், மாநிலம் முழுவதும் அரசு கேபிள் டிவி அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக அரசு பாக்சை வாங்கி தனியார் பாக்ஸ்களை எடுத்து வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று நிர்பந்தம் செய்கிறார்கள். ஏற்கனவே விலை கொடுத்து தனியார் செட்டாப் பாக்ஸ்களை வாங்கி பொருத்தியுள்ள வாடிக்கையாளர்கள் மீண்டும் விலை கொடுத்து அரசு பாக்ஸை பொருத்த மறுப்பு தெரிவிக்கின்றனர். மறுக்கும் ஆபரேட்டர்கள் பகுதியில் புதியவர்களுக்கு ஒளிபரப்பு கொடுக்கப்பட்டு தொழில் நெருக்கடியை ஏற்படுத்துகிறார்கள். இதனால் சட்டம், ஒழுங்கு சீர்குலைகிறது. இது போன்ற சம்பவம் அரியலூர், வடசென்னை, திருப்பூர், மதுரை, தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி, தட்டார் மடம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதனால் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. ஏற்கனவே தனியாரிடம் காசு கொடுத்து வாங்கப்பட்ட செட்டாப் பாக்ஸ் மீண்டும் அரசிடம் காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலைமை உள்ளது.
மேலும், வாடிக்கையாளர்கள் தனியார் பாக்ஸ்களை எடுக்கும் போது ஏன் என்றும் அதில் வரும் சேனல்கள் இதில் வராது என்றும் ஒளிபரப்பு நிரந்தரமாக வராது என்றும் தகராறு செய்கிறார்கள். இதனால் ஆபரேட்டர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். தமிழகம் முழுவதும் ஏதோ ஒரு நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸ் வாயிலாக வாடிக்கையாளர்கள் படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது திடீரென அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி சில லட்சம் பாக்ஸ்களை பொருத்த வேண்டும் என்று வலியுறுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும் என அம்மனுவில் கூறியிருந்தனர்.
மேலும், இந்த மனுவில் அனைத்து ஆபரேட்டர்களும் அராஜகப் போக்கோடு செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கையெழுத்திட்டு உள்ளனர். மேலும், அடுத்த கட்டமாக தமிழக முதல்வரை சந்திக்க உள்ளதாகவும் அவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
What's Your Reaction?






