மது போதையில் வட மாநிலத் தொழிலாளர்களை விரட்டி, விரட்டி அடித்த தூத்துக்குடி வாலிபர்கள்.!

தூத்துக்குடியைச் சேர்ந்த வாலிபர்கள் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அரசு பேருந்து கண்ணாடிகளை உடைத்தும், வட மாநில தொழிலாளர்களை துரத்தி, துரத்தி தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் பேருந்து நிலையம் எதிரே அரசு டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று மாலை தூத்துக்குடியில் இருந்து பல்லடத்திற்கு பேருந்தில் வந்த 6 வாலிபர்கள் டாஸ்மாக்கில் மூக்கு முட்ட மது குடித்துவிட்டு போதை தலைக்கு ஏறியதை மறந்து என்ன செய்வது என்றே தெரியாமல் அடாவடியில் ஈடுபட்டுள்ளனர். இரும்பு கம்பி, கம்பால் சுற்றி திரிந்த அந்த வாலிபர்கள் போவோர், வருவோரை ஆபாசமாக பேசி அச்சுறுத்தலில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் அரசு பஸ் கண்ணாடிகளையும் நொறுக்கியுள்ளனர்.
பின்னர், அருகே உள்ள ஓட்டலுக்கு சாப்பிட வந்த பப்பு ராஜ் என்ற வடமாநில தொழிலாளரையும் அவரது நண்பர்களையும் வம்புக்கு இழுத்து தாக்கியுள்ளனர். வட மாநிலத்தவர்கள் பயந்து போய் ஓட்டம் பிடித்த நிலையில், அவர்களை விரட்டி சென்று சரமாரியாக தாக்கி அங்குள்ள இருசக்கர வாகனங்களையும் நொறுக்கியுள்ளனர். ஒரு கட்டத்தில் போதை தலைக்கேறி தூத்துக்குடி வாலிபர்களே ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். இதில் அவர்களுக்கும் ரத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் விரைந்து சென்று அட்டூழியத்தில் ஈடுபட்ட தூத்துக்குடி வாலிபர்களை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
மேலும், வாலிபர்கள் தூத்துக்குடியை சேர்ந்த குணசேகரன், பாலமுருகன், மதன், மாரிச்செல்வம் என தெரிய வந்தது. போலீசார் வருவதை பார்த்ததும் இரு வாலிபர்கள் தப்பி ஓடிவிட்டனர். படுகாயம் அடைந்த இரண்டு வட மாநில தொழிலாளர்கள் பல்லடம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். காயம் பட்ட தூத்துக்குடி வாலிபர்களும் அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கட்டிட வேலைக்காக வந்த இடத்தில் குடித்துவிட்டு அராஜகத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. பல்லடம் போலீஸ் துணை சுப்பிரண்டு சுரேஷ் விசாரிக்க சென்ற இடத்தில் அந்த வாலிபர்கள் காலில் விழுந்து கதறி போதையில் தெரியாமல் செய்து விட்டோம் விட்டு விடுங்கள் என்றுள்ளனர்.
ஆனால் வீடியோ எடுக்க வந்த பத்திரிக்கையாளர்களை பார்த்து 'வா வந்து நல்லா எடு' என திமிர் காட்டியுள்ளனர். பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், பொதுமக்களை அச்சுறுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல், பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட பல பிரிவுகளில் தூத்துக்குடி வாலிபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
What's Your Reaction?






