ஸ்டெர்லைட் விவகாரம் தந்தை ஆதரவு., மகன் எதிர்ப்பு.!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை வேண்டும் என தந்தை கதிர்வேலும், வேண்டாம் என மகன் பெருமாள் சாமியும் கூறி வருவது பொதுமக்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 22 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என 2018ஆம் ஆண்டு பல்வேறு அமைப்புகள் போராட்டங்கள் நடத்தியது. போராட்டத்தின் போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இருந்தும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி வேதாந்தா நிறுவனம், நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருவதால், தொழிற்சாலையை மீண்டும் தமிழக அரசு திறக்க வேண்டும் என போராட்டம் நடத்த கடந்த வாரம் ஐஎன்டியுசி, தமிழ்நாடு எழுச்சி தொழிலாளர் நலச்சங்கம், உள்ளூர் மீனவர்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், காவல்துறையோ சட்டம், ஒழுங்கை காரணம் காட்டி போராட்டத்திற்கு அனுமதி மறுத்தது. ஆனால், பத்திரிகையாளர்களை சந்தித்த கதிர்வேல் சட்ட ரீதியாக நீதிமன்றம் சென்று போராட்டம் நடத்த அனுமதி வாங்குவோம் என்றார். பின்னர், பல்வேறு அமைப்புகள் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக போராட்டம் நடத்த அனுமதி வழங்கக் கூடாது என கூறிவந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுக்குழு உறுப்பினரும், ஸ்டெர்லைட் ஆதரவாளர் கதிர்வேலின் மகனுமாகிய பெருமாள் சாமியும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கோரி போராட்டம் நடப்பதற்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதிக்க கூடாது என தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த பெருமாள் சாமி, ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகிகளான சுமதி, இசக்கியப்பன் ஆகியோர் பொதுமக்களிடம் பணத்தை கொடுத்து போராட்டத்தை தூண்டுகின்றனர். ஸ்டெர்லைட் ஆலை வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் திறக்க வேண்டும் என போராட்டம் நடத்துவதாக கூறி வருவது கலவரம் நடந்து விடுமோ என்று அச்சமாக உள்ளது. ஆகவே, காவல் துறை இரும்பு கரம் கொண்டு அடக்கி வைக்க வேண்டும். தமிழக அரசும் ஸ்டெர்லைட் ஆலையை முற்றிலுமாக அப்புறப்படுத்தி அங்கு வேறு ஒரு தொழிற்சாலையை கொண்டு வர வேண்டும்.
வேலைவாய்ப்பு இல்லாததால் ஸ்டெர்லைட் தொழிற்சாலை வேண்டுமென கூறுவது ஏற்கத்தக்கதல்ல., தூத்துக்குடியில் வின்ஸ்பாட் தொழிற்சாலை, பர்னிச்சர் பார்க், சாப்ட்வேர் நிறுவனம் வந்துள்ளது இதனால் வேலை வாய்ப்புகள் அதிகமாகி உள்ளது. ஆகவே, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வேண்டுமென போராட்டம் நடத்தி தூத்துக்குடியை மீண்டும் கலவர பூமியாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
தூத்துக்குடியில் தந்தை ஸ்டெர்லைட் வேண்டுமெனவும், மகன் ஸ்டெர்லைட் வேண்டாமெனவும் கூறிவருவது பொதுமக்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.
What's Your Reaction?






