தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும்., 300க்கும் மேற்பட்டோர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இல்லத்தில் குவிந்தனர்..!

தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளம் மீனவ கிராமத்தில் தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும் என தருவைக்குளம் ஊர் மக்கள் 300க்கும் மேற்பட்டோர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இல்லத்தில் குவிந்தனர்..!
தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளம் மீனவ கிராமத்தில் விசைப்படகு, நாட்டுப்படகு என 500க்கும் மேற்பட்ட படகுகள் மூலம் மீனவர்கள் கடலில் மீன் பிடித்து வருகின்றனர். இங்கு தொழில் வளம் அனைத்தும் கடலையும் அதனை சார்ந்தே உள்ளது. தமிழ்நாட்டு அந்நிய செலவாணியில் வெளிநாட்டுக்கான மீன் ஏற்றுமதியில் தருவைக்குளம் முக்கிய பங்கு வகிக்கிறது.
மீன் பிடி தொழில் வளர்ச்சிக்காக தருவைகுளத்தில் அரசு முழு கவனம் செலுத்தி பல கோடிகள் மானியங்களாக முதலீடுகளாக செய்து வருகிறது. தருவைகுளம் கிராமத்தில் மீன் இறங்கு தளம் உள்ளது. சாதாரணமாக கடல் சீற்றத்தின் போது மீன் இறங்குதள பாலத்தில் படகுகளை பிடித்து மீன்களை இறக்கவும், ஐஸ் மற்றும் தண்ணீர் போன்றவைகளை ஏற்றவும் முடியாத நிலை உள்ளது. தற்போது மணல் திட்டுக்களும், உருவாகியுள்ளது. தவிர, நீரோட்டக் காலங்களில் படகுகள் சீராக இயங்க முடியாத வகையில் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதிப் பலத்த சேதமாவதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், மீனவர்களின் வாழ்வாதாரம் கருதி தூண்டில் வளைவு உடனே அமைத்து தர வேண்டும் என தருவைகுளம் மீனவர்கள், அவர்களின் குடும்பத்தினர் சுமார் 300க்கும் மேற்பட்டோர் தூத்துக்குடி கணேஷ் நகரில் மீன்வளம் -மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இல்லத்தில் அமைச்சரை சந்தித்து மனு அளித்தனர்.
அப்போது அமைச்சருக்கும், மக்களுக்கும் இடையே காரசாரமான விவாதம் நடந்தது..,
அமைச்சர்: ஏற்கனவே நீங்கள் கேட்காமல் தானே ஆய்வு நடத்தி இருக்கிறோம். நீங்கள் கேட்டா நாங்கள் ஆய்வு நடத்தினோம். உடனடியாக தூண்டில் வளைவு அமைக்க முடியாது. ஐஐடி குழுக்கள் ஆய்வு செய்ய வேண்டும். அதன் பின் முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்வோம்.
மக்கள்: இது சம்பந்தமாக பட்ஜெட்டில் அறிவிப்பு வருமா?
அமைச்சர்: பட்ஜெட்டில் ஏனோ, தானோ என அறிவிக்க முடியாது. நினைத்த உடனே ஏதும் செய்ய முடியாது.
மக்கள்: திமுக ஆட்சிக்கு வந்து நான்கு வருடம் ஆகிவிட்டதே?
அமைச்சர்: நீங்கள் 10 வருடமாக கேட்டிங்களா? 75 லட்சம் ஒதுக்கி ஆய்வானது நேர போக்கிற்காகவா செய்தோம்.
மக்கள்: 84 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதை செயல்படுத்தவில்லையே..,
அமைச்சர்: அது யார் என்று எனக்கு தெரியாது.
மக்கள்:எப்போது தூண்டில் வளைவு பாலம் அமைப்பீர்கள்..
அமைச்சர்: உங்ககிட்ட கேட்டா நாங்க ஆய்வு செய்தோம்.
மக்கள்: தருவைகுளம் கிராம மக்கள் கனிமொழி எம்பியுடமும், உங்களிடமும் அளித்த ஒரே மனு இது தான், ஆகவே, தூண்டில் வளைவு அமைத்து தருவோம் என வாக்குறுதி கொடுங்கள். இல்லை என்றால் நாங்கள் அடுத்த கட்ட போராட்டத்திற்கு செல்வோம்.
அமைச்சர்: எந்த கட்டத்திற்கு போனாலும் அரசு தானே செய்ய வேண்டும்.
அமைச்சர்: ஒரு சிறிய நிதி கூட மத்திய அரசு தர மாட்டேங்குது. போராடி தான் வாங்கிக் கொண்டிருக்கின்றோம்.
மக்கள்: இதற்கும் மத்திய அரசுக்கும் சம்மந்தம் இல்லையே., உங்களுக்கு தானே ஓட்டு போட்டோம். 40க்கு 40 உங்களை தானே வெற்றி பெற வைத்தோம். 27 வருடமாக போராடிக் கொண்டிருக்கின்றோம் தூண்டில் வளைவு அமைக்க கோரி., ஆகவே முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
அமைச்சர்: எம்பியுடம் பேசி முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன்.
இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது, போராட்டம் நடத்தப் போவதாக தான் அறிவிக்க இருந்தோம். ஆனால் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் எங்கள் மீனவர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டவர் ஆகவே போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளோம். உடனடியாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும் என்றனர் ஊர்மக்கள்.
What's Your Reaction?






