தலைவர்கள் படம் புறக்கணிப்பு.., தூத்துக்குடி விமான நிலையத்தில் புது பூகம்பம்.!

தூத்துக்குடி விமான நிலையத்தில் தூய பனிமய அன்னை பேராலயம், மன்னர் தேர்மாறன், குரூஸ் பர்னாந்தீஸ் போன்ற தலைவர்கள் படம் இடம்பெற வேண்டுமென அன்னை பரத நல தலைமைச் சங்கம் சார்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.!
அன்னை பரதர் நல தலைமைச் சங்கம் சார்பாக அதன் தலைவர் சேவியர் வாஸ், பொதுச் செயலாளர் பாஸ்கரன் பர்னாந்து, பொருளாளர் காஸ்ட்ரோ பர்னாந்து ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 13.3.25 முதல் சமூக வலைதளங்களில் தூத்துக்குடி விமான நிலையத்தில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு அமைக்கப்பட்டுள்ள சுவர்களில் வரைந்து வைக்கப்பட்டுள்ள ஓவியங்கள் குறித்த காணொளி உலா வருகிறது. அதில் தூத்துக்குடியின் அடையாளங்கள் காட்டப்படும் போது விடுதலை வீரர் கட்டபொம்மன், பாஞ்சாலங்குறிச்சி கோட்டை, மற்றும் திருச்செந்தூர் முருகப்பெருமான் கோயில் ஆகியவை இடம் பெற்றிருக்கிறது. இது மகிழ்ச்சி, வரவேற்கிறோம். ஆனால், தூத்துக்குடி என்றாலே அதன் முக்கிய அடையாளங்களில் தலையானதாக எல்லா மத மக்களாலும் வழிபடப்படுகின்ற பேராலயமாக திகழும் தூய பனிமய அன்னை பேராலயம் காட்டப்படவில்லை.
விடுதலைப் போராட்ட வீரராக மத்திய அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அரசு சார் ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள மன்னர் தேர்மாறன், 5 முறை நகர் மன்ற தலைவராக அமர்ந்து பணி செய்து தூத்துக்குடி மக்களுக்கு தூய குடிநீர் குடிக்க தந்த கோமான் குரூஸ் பர்னாந்தீஸ் போன்ற தலைவர்களின் படங்கள் அதில் இடம்பெற்று இருப்பதாக தெரியவில்லை. மண்ணின் உண்மை அடையாளங்களை மறுதலிக்கும் இச்செயல் தூத்துக்குடி மாநகர மக்களை குறிப்பாக இம்மண்ணின் ஆதி குடி மக்களான பெரும்பான்மையாக வாழும் பரத குலச் சமுதாய மக்களை மிகுந்த அதிர்ச்சிக்கும், மன வேதனைக்கும் உள்ளாக்கியுள்ளது.
ஆகவே, தாங்கள் இது குறித்து தக்க நடவடிக்கை எடுத்து விடுபட்ட மேற்குறிப்பிட்ட தூத்துக்குடியின் மிக முக்கியமான அடையாளங்களை விமான நிலையத்தில் பதிந்திட ஆவணம் செய்ய வேண்டுமென அம்மனுவில் குறிப்பிட்டிருந்தது.
What's Your Reaction?






