தூத்துக்குடி வ.உ.சி மார்க்கெட் இடித்து விரைவில் புதிய கட்டிடம்.!

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட வ.உ.சி மார்க்கெட்டை இடித்து புதிய கட்டிடம் கட்ட மாநகராட்சி தரப்பு முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.!
தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது வ.உ.சி மார்க்கெட்., 1920ல் கட்டப்பட்ட இந்த மார்க்கெட் சுமார் 100 வருடங்களுக்கு மேலாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் சுமார் 550க்கும் மேற்பட்ட கடைகள் உள்ள நிலையில் இதனை நம்பி சுமார் 40 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன.
கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மார்க்கெட் இடித்து கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கோரப்பட்டு ஒப்பந்ததாரருக்கு பணி செய்வதற்கான ஆணை வழங்கப்பட்டது. அப்போது மார்க்கெட்டை இடிக்க வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அத்திட்டம் கைவிடப்பட்டது.
ஆனால், தற்போது திமுக ஆட்சியில் இந்த வருட பட்ஜெட்டில் வஉசி மார்க்கெட்-டை இடித்து கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஆணையும் தமிழக அரசு தூத்துக்குடி மாநகராட்சிக்கு அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் 2 தினங்களுக்கு முன்பு வடக்கு மண்டல அலுவலகத்தில் வைத்து மக்கள் குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு வ.உ.சி மார்க்கெட்-டை இடித்து புதியதாக கட்டப்படும் என்று தெரிவித்தார். இதனையடுத்து ஐக்கிய வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் நேற்று வியாழக்கிழமை மாநகராட்சி மேயர் ஜெகனை சந்தித்து மார்க்கெட்டை இடிக்க வேண்டாம் என்று கோரிக்கை வைத்துள்ளதாக தெரிகிறது.
மேலும், வியாபாரிகள் சங்க அவசர பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டு, வியாபாரிகளிடம் கருத்தும் கேட்கப்பட்டுள்ளது. அதில் காய்கறி மார்க்கெட்டை இடிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் வியாபாரிகள். இதனை தொடர்ந்து, ஒவ்வொரு வியாபாரிகளிடமும் மார்க்கெட்-டை இடிக்க வேண்டாம் என்று கையெழுத்திட்ட மனுவுடன் மாநகராட்சி மேயர் ஜெகனை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க வியாபாரிகள் முன் வந்துள்ளனர்.
ஆனால், தமிழக அரசு நகரின் மையப்பகுதியில் உள்ள பழமை வாய்ந்த வ.உ.சி மார்க்கெட் கட்டிடத்தை இடித்து கட்ட வேண்டும் என்று உறுதியாக உள்ளதாகவும், காரணம், அங்குள்ள சில கடைகள் இடிந்த நிலையில் உள்ளதால் ஏதாவது விபரீத விபத்துக்கள் ஏற்பட்டால் அது தமிழக அரசுக்கும், தூத்துக்குடி மாநகராட்சியையும் பாதிக்கும் என்பதால் மாநகராட்சி நிர்வாகம் இடித்து கட்ட உறுதியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், மாநகராட்சி தரப்பில் கூறப்படுவதாவது, தற்போது கடை வைத்துள்ள அனைவருக்கும் மீண்டும் கடைகள் அப்படியே வழங்கப்படும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. அதேபோல மார்க்கெட்டின் மொத்த பரப்பளவு 3 ஏக்கர். இதில் ஒவ்வொரு ஏக்கராக இடித்து கடைகள் கட்டப்படும். இடிக்கப்பட்ட கடைகள் மட்டும் தான் அப்புறப்படுத்தப்படும். இடிக்காத மற்ற பகுதி கடைகள் தொடர்ந்து இயங்கும் என்பதையும் மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் கூறுகின்றனர்.
வியாபாரிகள் சங்கத்தினர் மார்க்கெட்டை இடிக்க கூடாது எனவும், மாநகராட்சி தரப்பினர் இடித்து கட்டுவோம் என்றும் உறுதியாக உள்ள நிலையில், இறுதியில் யார் வெல்வார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
What's Your Reaction?






