பள்ளி மாணவி மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டியில் ஏறி நின்று தற்கொலை முயற்சி..!

Jan 24, 2025 - 16:09
Jan 24, 2025 - 16:14
 0
பள்ளி மாணவி மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டியில் ஏறி நின்று தற்கொலை முயற்சி..!

கோவில்பட்டி வடக்கு திட்டங்குளத்தில் காவல்துறையை கண்டித்து பள்ளி மாணவி மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டியில் ஏறி நின்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வடக்கு திட்டங்குளத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். கார் டிரைவரான இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த உறவினர்களான அஜய் குமார் மற்றும் வேல்முருகன் ஆகியோருக்கும் தனியார் நிதி நிறுவனத்தின் கடன் மூலம் கார் வாங்கியது தொடர்பாக பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டுள்ளது. 

இது சம்பந்தமாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் வேல்முருகன் மனைவி ஜோதியும், கார்த்திகேயன் மனைவி மரகதவள்ளியும் அளித்த புகாரின் பேரில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் போலீசார் முறையான விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், போலீஸ் அதிகாரிகள் விசாரணை சரியாக இல்லையெனவும், காரை ஒரு தரப்பினர் அபகரித்து விட்டதாகவும், இதனால் தங்களது குடும்ப வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி கார் டிரைவர் கார்த்திகேயனின் மகள் கன்னிகா (பள்ளி மாணவி) மேல்நிலை நீர் தேக்க குடிநீர் தொட்டியில் ஏறி நின்று தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறினார்.

பின்னர் உடனடியாக, சம்பவ இடத்துக்கு வந்த கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன் உள்ளிட்ட போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி சிறிது நேரத்திலேயே மாணவி கன்னிகாவை மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டியில் இருந்து பத்திரமாக மீட்டனர். 

இது தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow