புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை? காவல் நிலையம் முன்பாக தீக்குளித்த நபர்..!

வட சென்னை ஆர்கே நகர் காவல் நிலையம் முன்பாக வாலிபர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..!
சென்னை கொருக்குப்பேட்டை கொடுங்கையூர் நெடுஞ்சாலையில் உள்ள ஆர்கே நகர் காவல் நிலைய வாசலுக்கு கையில் சிறு வாலியுடன் நடந்து வந்த வாலிபர் திடீரென்று வாலியில் இருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றி தீ வைத்து கொண்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில் வாலிபர் தீக்குளித்ததில் காவல் நிலைய பெயர் பலகையும் எரிந்து தீக்கறையானது. உடனடியாக காவல் நிலையத்தில் இருந்த காவலர்களும், அருகில் இருந்த பொதுமக்களும் வாலிபர் மீது எரிந்த தீயை அணைத்தனர். மேலும் தீக்குளித்து படுகாயமடைந்த வாலிபரை சிகிச்சைக்காக அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் காவல் நிலைய வாசலில் தீக்குளித்த நபர் யார்? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தீக்குளித்த நபர் ராஜன் என தெரியவந்துள்ளது. இவரை அவரது நண்பர்கள் இருவர் தாக்கியதாகவும், இது தொடர்பாக, புளியந்தோப்பு காவல் நிலையத்தில் ராஜன் புகார் அளிக்க வந்துள்ள நிலையில், காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காததால் தீக்குளித்ததாகவும் கூறப்படுகிறது.
ஆர்கே நகர் காவல் நிலைய வாசலில் வாலிபர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?






