தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் இரு நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்.!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக வல்லநாடு தலைமை நீரேற்று நிலையம் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கலியாவூரில் இருந்து வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வரும் பிரதான குடிநீர் குழாயில் பெரிய அளவிலான உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பெருமளவில் குடிநீர் வெளியேறி வருவதால், அவசர சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதன் காரணமாக 07.08.2026 (வெள்ளிக்கிழமை) அன்று தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் முழுமையாக நிறுத்தப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், கொம்புகாரநத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 12.08.2026 (புதன்கிழமை) நடைபெற உள்ளதால், அன்றும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
எனவே, மேற்கண்ட இரு நாட்களிலும் குடிநீர் விநியோகம் இருக்காது என்பதால், பொதுமக்கள் முன்கூட்டியே தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்து, கிடைக்கும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி மாநகராட்சியின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பிரியங்கா கேட்டுக் கொண்டுள்ளார்.
துப்பறிவாளன் மணி