சொத்து வரி நிலுவை: 15 கட்டிடங்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு.!

சொத்து வரி நிலுவை: 15 கட்டிடங்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு.!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சியில் சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரிகளை நீண்டகாலமாக செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்த 15 கட்டிடங்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சியில் 2025–26ஆம் ஆண்டு வரையிலான (31.03.2026 வரை) சொத்து வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரிகளை செலுத்தாத கட்டிடங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவற்றின் மீது குடிநீர் இணைப்பு துண்டித்தல் மற்றும் ஜப்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட 24, 29, 38, 39 மற்றும் 41 ஆகிய வார்டுகளில் உள்ள வடக்குரதவீதி, சந்தை ரோடு, மீனாட்சிபுரம் மேற்கு, பாளையங்கோட்டை ரோடு மற்றும் குரூஸ்புரம் பகுதிகளில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

2022–23 முதல் 2025–26 வரையிலான காலத்திற்கு ரூ.6,000 முதல் ரூ.95,000 வரை சொத்து வரி நிலுவை வைத்திருந்த 15 கட்டிடங்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

மேலும், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்ட கட்டிடங்களுக்கான சொத்து வரி நிலுவையை 3 நாட்களுக்குள் செலுத்தாவிட்டால், நடைமுறையில் உள்ள விதிகளின்படி ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது.

எனவே, பொதுமக்கள் தங்களது கட்டிடங்களுக்கான சொத்து வரி, குடிநீர் கட்டணம், திடக்கழிவு மேலாண்மை வரி மற்றும் பாதாள சாக்கடை கட்டணம் உள்ளிட்ட அனைத்து வரிகளும் நடப்பு காலம் வரை செலுத்தப்பட்டுள்ளனவா என்பதை சரிபார்த்து, நிலுவை இருப்பின் உடனடியாக செலுத்தி, குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் பிற சட்ட நடவடிக்கைகளை தவிர்க்குமாறு தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா கேட்டுக் கொண்டுள்ளார்..