மாணவர்களின் முயற்சியால் தூய்மையாகும் முத்துநகர் கடற்கரை.!

மாணவர்களின் முயற்சியால் தூய்மையாகும் முத்துநகர் கடற்கரை.!

தூத்துக்குடி: வீ த லீடர் அமைப்பு நிறுவனர் அண்ணாமலை கடந்த மாதம் கன்னியாகுமரி முதல் தூத்துக்குடி வரையிலான சுமார் 175 கிலோமீட்டர் தூரம் கடற்கரைப் பகுதிகளை தூய்மைப்படுத்தும் பணியை தொடங்கி வைத்தார். மேலும், கடற்கரை தூய்மைப் பணியை தொடர்ந்து ஒரு ஆண்டு காலம் மேற்கொள்ள வேண்டும் என அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடியைச் சேர்ந்த வீ த லீடர் அமைப்பினர் தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை மற்றும் ரோச் பார்க் கடற்கரையில், வீ த லீடர் அமைப்பைச் சேர்ந்த பேச்சிமுத்து தலைமையில் கிங்ஸ் அகாடமியில் போட்டித் தேர்வுக்கு பயிற்சி பெற்று வரும் மாணவ, மாணவிகள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் இணைந்து கடற்கரையை சுத்தம் செய்து வருகின்றனர்.

கடந்த ஆறு வாரங்களாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கடற்கரைக்கு வந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடற்கரை மணல் பரப்பில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் உள்ளிட்டவற்றை அகற்றி, கடற்கரைப் பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க அவர்கள் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

போட்டித் தேர்வுகளுக்காக தீவிரமாக பயிற்சி பெற்று வரும் நிலையிலும், சமூகத்தின் மீதும் சுற்றுச்சூழலின் மீதும் தங்களுக்கு உள்ள பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் வகையில் மாணவர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும், கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து குப்பைகளை ஆங்காங்கே வீசாமல், அதற்கென வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் போட வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் உணவுக் கழிவுகளை கடற்கரை மணல் பரப்பில் வீசுவதை தவிர்த்து, கடற்கரையை தூய்மையாக பராமரிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என மாணவ, மாணவிகள் மற்றும் வீ த லீடர் அமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும், கடற்கரை தூய்மைப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும், பொதுமக்களும் தங்களால் இயன்ற வகையில் இந்த சமூக நலப்பணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.