எம்ஜிஆரின் மறு உருவம் விஜய்- தூத்துக்குடி தவெக பொறுப்பாளர் பேட்டி.!
தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் பிரைட்டர் தூத்துக்குடியை சேர்ந்த அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் ஆகிய இருவரையும் கடுமையாக சாடியுள்ளார்.!
தூத்துக்குடியில் நேற்று மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்-யை கடுமையாக சாடினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் பிரைட்டர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும் போது, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பற்றி தூத்துக்குடியில் உள்ள அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன் ஆகியோர் விமர்சனம் வைத்துள்ளனர். இவர்களுக்கு எங்கள் தலைவர் விஜய் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. விஜய் 300 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாகவும், அந்த பணத்தை மக்களுக்கு என்ன செய்துள்ளார் என்றும் அமைச்சர் கேட்கின்றார். விஜய் ஆரம்பம் முதல் ரசிகர் மன்றம் மூலமாக உதவிகளை செய்துள்ளார். சுனாமி மற்றும் கொரோனா காலகட்டத்தில் சத்தம் இல்லாமல் உதவிகள் செய்துள்ளார். குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள், குறுதி நன்கொடை, விலையில்லா உணவு ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. ஆகவே விஜய் பற்றி பேச அமைச்சருக்கு தகுதி இல்லை.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சியில் இருந்துள்ளார். 25 ஆண்டு காலமாக அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தும் அவர் என்ன பணி மக்களுக்கு செய்துள்ளார். இவர் அமைச்சராக இருக்கும்போது தொகுதிக்கு என்ன நன்மைகளை செய்தார் என்று எடுத்து கூற முடியுமா? முடியாது. ஆனால் என்ன செய்யவில்லை என்பதை பட்டியலிட்டு எங்களால் காட்ட முடியும். இளைஞர்களின வேலைவாய்ப்பிற்காக தொழிற்சாலைகள் அமைக்கப்படவில்லை. இளைஞர்களுக்கான திட்டம் எதையும் செய்யவில்லை.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றார்கள். ஆனால் திருச்செந்தூரில் கேவலத்திலும் கேவலமாக இருக்கிறது. சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் பின்புறம் கழிவு நீர் ஓடிக் கொண்டிருக்கிறது துர்நாற்றம் தாங்க முடியவில்லை. அங்கு ஒரு மருத்துவமனை உள்ளது அந்த மருத்துவமனை பின்புறமும் 24 மணி நேரமும் துர்நாற்றம் வீசிக் கொண்டே இருக்கிறது. இதனை சரிப்படுத்த எந்தவித நடவடிக்கையும் அவர் எடுக்கவில்லை.
சிறுபான்மையினர், மீனவர்களின் வாக்கு மட்டும் வேண்டுமா இவருக்கு. திருச்செந்தூர் அருகே உள்ள புன்னகாயல் கிராமத்தில் ஆண்டாண்டு காலமாக குடிநீர் பிரச்னை உள்ளது. இதனை அமைச்சரிடம் கேட்டு, கேட்டு போராடி எந்தவித பலனும் இல்லை. ஆகவே ஊர் மக்கள் தன்னச்சையாக எழுந்து போராட்டம் நடத்தினார்கள். சட்டமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு 40 நாட்களுக்கு மேலாக தான் தண்ணீர் வருகிறது என்று சொன்னால் இதனை விட கேவலம் வேறொன்றுமில்லை. ஆத்தூர் பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதுவரைக்கும் அந்தப் பாலம் கட்டி முடிக்கப்படவில்லை. ஆறுமுகநேரி அருகே உள்ள குளங்கள் தூர்வாரப்படவில்லை. ஆனால் மக்கள் பணத்தை தான் தூர்வாறுகிறார்கள்.
உடன்குடி பகுதியில் ஒரு திட்டத்தை நான்கு முறை செய்து வருகிறார்கள். அந்தப் பெருமைக்கு சொந்தக்காரர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். 30 லட்சம் ரூபாய் மதிப்பில் பணிகள் நடைபெற்ற பின்னரும் அதில் மீண்டும் கோடிக்கணக்கில் டெண்டர் எடுத்து மீண்டும் பணிகளை மேற்கொள்கின்றார்கள். இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? ஆகவே உங்கள் சட்டமன்றத் தொகுதியின் பணிகளை செம்மையாக செய்ய வேண்டும். அதனை முதலில் கற்றுக் கொள்ளுங்கள்.
எம்ஜிஆரின் மறு உருவமாக விஜய்-யை மக்கள் பார்த்து கொண்டு இருக்கின்றார்கள். திமுகவின் பொருளாளராக எம்ஜிஆர் இருந்ததாக அனிதா ராதாகிருஷ்ணன் கூறுகின்றார். எம்ஜிஆர் பொருளாளராக தான் இருந்தார். ஆனால் உங்கள் சேட்டை தாங்க முடியாமல் தான் எம்ஜிஆர் தனி கட்சி ஆரம்பித்தார். அவர் ஆண்ட 11 ஆண்டுகளும் உங்களை ஆட்சி கட்டிலில் அமர்த்தாமல் இறுதிவரை வெளியில் உட்கார வைத்தவர் எம்ஜிஆர். ஆனால் நடுவில் கொஞ்சம் பக்கத்தை காணோம் என்கின்ற மாதிரி பாதியை சொல்லாம விட்டுவிட்டீர்கள். முழு கதையையும் நீங்கள் சொல்ல வேண்டும். எம்ஜிஆர் பெரிய மனிதர், வரலாற்றிற்கு சொந்தக்காரர். ஆகவே, தேவையற்ற விமர்சனத்தை இனி வைத்தால் பதிலடி கொடுத்து கொண்டே இருப்போம்.
தேர்தல் காலத்தில் கொடுக்ககூடியது வாக்குறுதி. ஒழுக்கமான அரசியல் கட்சியாக இருந்தால், அனுபவமிக்க அரசியல் கட்சியாக இருந்தால் வாக்குறுதி ஒன்றை கொடுக்கும்போது நம்மால் நிறைவேற்ற முடியுமா என்ற அடிப்படை புரிதல் கூட இல்லாமல் இருட்டு அறைக்குள் உட்கார்ந்து எழுதிக் கொடுப்பவர்களை வைத்துக்கொண்டு, வாக்குறுதி கொடுத்துள்ளீர்கள். ஆனால் இன்று மக்கள் படும் வேதனை உண்மையான எதிர்க்கட்சியாக மக்களின் குரலாக, மக்களின் மனசாட்சியாக தமிழக வெற்றி கழகம் இருக்கிறது.
திமுக ஆட்சியில் 100 சதவீதம் சொத்து வரி உயர்வு அதுமட்டுமா எந்தவித அரசியல் அனுபவம் இல்லாமல் ஸ்ட்ரெய்ட்-டா துணை முதலமைச்சராக வந்த உதயநிதி ஸ்டாலின் சினிமா செய்திகளை நான் பார்ப்பதில்லை என்று கூறுகிறார். ஆனால் அவர் சினிமாவில் நடித்துவிட்டு தான் அரசியலுக்கு வந்தவர். நாங்கள் வந்தவுடன் முதலில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றார். இதனை எதிர்க்கட்சிகள் கேட்கவில்லை. ஆனால் தமிழக வெற்றி கழகம் இதனை கேட்கும். உங்களுக்கு மாற்றாக உருவாகி தமிழகத்தில் வென்று காட்டுவோம். செய்தியாளர்களை கண்டு ஓடியவர் கனிமொழி. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு டாஸ்மாக் இருப்பதால் இளம் விதவைகள் அதிகமாகி விட்டனர் என்றார் தூத்துக்குடி எம்பி கனிமொழி, தற்போது திமுக ஆட்சியில் முக்கு-க்கு முக்கு டாஸ்மாக் உள்ளது. குடிகாரர்களின் பிரதேசமாக தமிழ்நாடு மாறிவிட்டது. இளைஞர்கள் போதை கலாச்சாரத்தில் சீரழிந்து கொண்டிருக்கிறார்கள்.
1கோடியே 80 லட்சம் பேர் இளம் வாக்காளர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் உங்களுக்கு விடை கிடைக்கும். ஆகவே, விஜய் பற்றி திமுகவின் உருட்டல், மிரட்டல்கள் எங்களிடம் வேண்டாம். நீங்கள் தோல்வியின் விளிம்பில் உள்ளீர்கள். ஆகவே பதற்றம் அதிகமாக தான் இருக்கும்.
சனிக்கிழமை மட்டும்தான் விஜய் பிரச்சாரம் மேற்கொள்வதாக அமைச்சர் கூறுகின்றார். அது ஏன் என்றால் உங்களை ஆறு நாட்கள் கதற விடுவதற்காகவே. இனி உங்கள் வாழ்க்கை முழுவதும் கதறல் தான். 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் தோல்வியை பரிசாக கொடுக்க தயாராகி விட்டார்கள்.
மீன் வளத்துறை அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன்-டம் மக்கள் பிரச்னை பற்றி எடுத்து கூறினால் உங்கள் ஓட்டை எடுத்து குப்பையில் போடுங்கள் என்று திமிராக பேசுகின்றார். ஆகவே தேவையற்ற பேச்சுகளை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் திருச்செந்தூரில் சட்டமன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு மாபெரும் போராட்டத்தை முன்னெடுப்போம்.
அமைச்சர் கீதாஜீவன் தமிழக வெற்றிக் கழகத்தினரை பார்த்து கொள்கை இல்லா கூட்டம், இந்த கூட்டத்திற்கு கோட்பாடு, ஒழுக்கம் இல்லை என்று கூறுகின்றார். ஒழுக்கத்தை பற்றி நீங்கள் எங்களுக்கு கற்று கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. தளபதி எங்களுக்கு ஒழுக்கத்தை கற்று கொடுத்து இருக்கின்றார். ஒழுக்கத்தை பற்றி திமுகவின் மூத்த அமைச்சர்களான, பொன்முடி துரைமுருகன் ஆகியோருக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். காரணம், உச்ச நீதிமன்றமே நீங்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. ஆகவே எங்களுடைய ஒழுக்கத்தைப் பற்றி யாரும் பாடம் எடுக்க தேவையில்லை. அவ்வாறு நீங்கள் எடுத்தால் உங்களுக்கு நாங்கள் பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டிய இடத்தில் இளைஞர்களாகிய நாங்கள் இருக்கின்றோம்.
இரு அமைச்சர்களும் மக்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டும், மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்-டம் போய் கேட்டால், 25 ஆண்டுகளாக நான் கோலப்போட்டி, கபடி போட்டி, குடம் கொடுத்துள்ளேன் என்கின்றார். மக்களுக்கான செயல் திட்டங்களை இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பினை, இளைஞர்களுக்கான செயல் திட்டத்தினை வழி வகுக்க வேண்டும். அதை தவிர்த்து விஜய் பற்றி பேசினால் தமிழக வெற்றிக் கழகத்தின் தெற்கு மாவட்டம் சார்பில் உடனுக்குடன் பதிலடி கொடுக்கப்படும் என்றார்.