தூத்துக்குடி தேர்தல் முடிவு: கீதாஜீவன் தோல்வி – கட்சிக்குள் சர்ச்சை.!
தூத்துக்குடி: தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்று முடிந்த தேர்தலில், தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்ட ஸ்ரீநாத் வெற்றி பெற்றார். திமுக சார்பில் போட்டியிட்ட கீதாஜீவன் தோல்வியடைந்தார். இது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை பெற்றது..
இந்தத் தோல்விக்கு காரணம், திமுக கட்சியினர் கீதா ஜீவனுக்கு முழுமையாக பணியாற்றவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக பேசப்பட்டது. இதனால் கட்சிக்குள் முரண்பாடுகள் இருந்ததா என்ற கேள்வியும் பொது மக்கள் மத்தியில் எழுந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கீதா ஜீவன் கூறி இருப்பதாவது.,
“தூத்துக்குடி தொகுதியில் நடைபெற்று முடிந்த தேர்தலில், வேட்பாளர்களின் தகுதி மற்றும் அவர்கள் செய்த மக்கள் பணிகளை பொருட்படுத்தாமல், சரியான அரசியல் புரிதல் இல்லாமல் வாக்களிக்கப்பட்டதே இந்தத் தோல்விக்குக் காரணம். கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் தங்களது பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றியுள்ளனர்”
“சிலர் தனிப்பட்ட விரோதத்தின் காரணமாக, தேவையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். அவற்றை யாரும் நம்ப வேண்டாம். திமுக தோல்வியால் தளரக்கூடிய இயக்கமல்ல" இத்துடன், கட்சியினர் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியது அவசியம் என்றும், எதிர்காலத்தில் வெற்றியை நோக்கி ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதன் மூலம், ஒரு சில கவுன்சிலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு கீதா ஜீவன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது..
செய்தியாளர் மு.மணிகண்டன்