தூத்துக்குடியில் திமுக – காங்கிரஸ் மோதல் தீவிரம்.!

தூத்துக்குடியில் திமுக – காங்கிரஸ் மோதல் தீவிரம்.!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு இடையிலான அரசியல் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி வெளியிட்டுள்ள வீடியோ அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தமிழக மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் மற்றும் காங்கிரஸ் கட்சி குறித்து முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அமைச்சர் கீதாஜீவன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் விமர்சனம் செய்திருந்தனர்..

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் பெருமாள்சாமி தொடர்ந்து அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரின் கருத்துகளுக்கு ஊடகங்கள் வாயிலாக பதிலளித்து வந்தார்.

குறிப்பாக அவர் கூறும் போது, காமராஜர் பிறந்த நாளன்று  திமுகவினர் மாலை அணிவிக்க வரக்கூடாது. வந்தால் நிச்சயம் எதிர்ப்பு தெரிவிப்போம் என்றும் கூறியுருந்தார். 

இந்த சூழலில், மூன்று நாட்களுக்கு முன்பு பெருமாள்சாமியின் வீட்டின் மீது மர்ம நபர் ஒருவர் கல் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக அவர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து, தூத்துக்குடியைச் சேர்ந்த திமுக வழக்கறிஞர் ரூபராஜா என்பவர் சமூக வலைதளங்களில் பெருமாள்சாமியை விமர்சித்து பதிவிட்டுள்ளார். அதற்கு பதிலளிக்கும் வகையில் பெருமாள்சாமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், தனிபட்ட முறையில் யாரையும் தரக்குறைவாக பேச வேண்டாம். எங்கள் தலைவர்களை பற்றி பேசப்பட்டதால் தான் நான் பதிலளித்தேன். அமைச்சர் கீதா ஜீவன் எந்தெந்த செயல்களில் ஈடுபட்டார் என்பது எனக்கு தெரியும். அவற்றை பொதுவெளியில் வெளியிட விரும்பவில்லை," என எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.

பெருமாள்சாமியின் இந்த வீடியோ தூத்துக்குடியில் திமுக - காங்கிரஸ் கட்சியினருக்கு இடையிலான அரசியல் மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.