உள்ளக மோதலா? கூட்டணி அதிருப்தியா? தூத்துக்குடியில் காங்கிரஸுக்கு பெரிய பின்னடைவு”
தூத்துக்குடி: தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திமுக–காங்கிரஸ் கூட்டணிக் கருத்து வேறுபாடு தற்போது தரை மட்டத்திலும் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்களும், கூட்டணி உறவில் ஏற்பட்ட விரிசலும் தற்போது கட்சித் தாவல்களாக வெளிப்படத் தொடங்கியுள்ளன.
அதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், மாநகராட்சி கவுன்சிலர்கள் உட்பட 35-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர்களான சந்திரபோஸ், ஏடின்டா, முன்னாள் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.எஸ். முரளிதரன் தலைமையில் திமுகவில் இணைந்தனர். வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதா ஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர்.
இதில் மாவட்ட, மாநகர், வட்டார மற்றும் மண்டல இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.
இந்த இணைவு நிகழ்ச்சிக்குப் பிறகு பேசிய நிர்வாகிகள், “அகில இந்திய காங்கிரஸ் தலைமை தற்போது கொள்கை, சித்தாந்தங்களை விட்டு சந்தர்ப்பவாத அரசியலுக்குச் சென்று கொண்டிருக்கிறது. 14 ஆண்டுகளாக திமுக–காங்கிரஸ் கூட்டணி இணைந்து செயல்பட்டு இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களில் 40க்கு 40 வெற்றியை பெற்றது. ஆனால் இன்று இரண்டு அமைச்சர் பதவிக்காக கூட்டணியை முறித்துக் கொண்டு தமிழக வெற்றிக்கழக அரசுக்கு ஆதரவு அளித்திருப்பது உண்மையான காங்கிரஸ் தொண்டர்களுக்கு ஏமாற்றமளித்துள்ளது என்றனர்..
அரசியல் வட்டாரங்களில் இன்னொரு சுவாரஸ்யமான தகவலும் பேசப்படுகிறது. ஆம், தற்போதைய மாவட்ட காங்கிரஸ் தலைவர் சகாயம் மற்றும் முன்னாள் தலைவர் முரளிதரன் ஆகியோருக்கிடையே நீண்டநாள் கருத்து வேறுபாடு நிலவி வந்ததாகவும் கூறப்படுகிறது.
"இருவருக்கும் ஏழாம் பொருத்தம்தான்” என கட்சியினரே கிசுகிசுக்க, திமுகவில் இணைய சரியான தருணத்தைக் காத்திருந்தவர்கள் தற்போது வாய்ப்பைப் பயன்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மொத்தத்தில், தூத்துக்குடியில் நடைபெற்ற இந்தக் கட்சித் தாவல் சம்பவம் சாதாரண அரசியல் மாற்றமாக மட்டுமல்லாமல், திமுக–காங்கிரஸ் கூட்டணிக்குள் நிலவி வந்த அதிருப்தியின் வெளிப்பாடாகவும் பார்க்கப்படுகிறது. கூட்டணிக் குழப்பம், தலைமை மோதல்கள் மற்றும் அரசியல் வாய்ப்புகள் ஆகியவை ஒன்றிணைந்து காங்கிரஸுக்கு மாவட்ட அளவில் பெரிய பின்னடைவை உருவாக்கியுள்ளன.
இதன் மூலம் திமுக தனது அமைப்பு வலிமையை மேலும் விரிவுபடுத்தியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தரை மட்ட தொண்டர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
அதுமட்டுமல்ல, மாநகராட்சி கவுன்சிலர்கள், இளைஞர் நிர்வாகிகள் தொடர்ந்து திமுகவில் இணைந்த நிலையில், தற்போது மாநில அளவிலான நிர்வாகியும் திமுகவில் இணைய உள்ளதாக வெளியாகும் தகவல் காங்கிரஸ் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரவிருக்கும் தேர்தல் சூழலில் இந்த மாற்றங்கள் மாவட்ட அரசியலில் மட்டுமல்லாமல் மாநில அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
செய்தியாளர் மு.மணிகண்டன்