முருகனின் அருளே அருள்'-திருச்செந்தூர் கடலில் தொலைந்த தங்கச் செயின்.!
திருச்செந்தூர் கடலில் தொலைந்த 2½ சவரன் தங்கச் செயின் மீட்பு... பக்தரிடம் ஒப்படைத்த கோவில் நிர்வாகம்
தமிழ் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று ஞாயிற்றுக்கிழமையையொட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
அப்போது முத்துக்கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த ஆதித்யா என்பவர் முருகனுக்கு முடி காணிக்கை செலுத்த வந்திருந்தார். தரிசனத்தைத் தொடர்ந்து கோவில் முன்புள்ள கடலில் நீராடியபோது, அவரது கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை சவரன் தங்கச் செயின் எதிர்பாராத விதமாக கடலில் தவறி விழுந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஆதித்யா, உறவினர்களுடன் தேடியும் செயின் கிடைக்காததால் கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தகவலின் பேரில் கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் தேடுதல் மேற்கொண்டபோதும், நேற்று செயினை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் இன்று காலை சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள் மற்றும் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் இணைந்து மீண்டும் தீவிர தேடுதல் நடத்தினர். நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு கடலில் தொலைந்த தங்கச் செயின் மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட செயின் கோவில் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆதித்யாவிடம் அவரது தங்கச் செயின் ஒப்படைக்கப்பட்டது..
செய்தியாளர் மு.மணிகண்டன்