“மூன்று நாட்களாக அமைச்சரை சந்திக்க முடியவில்லை” – உப்பள அதிபர்கள் வேதனை.!
தூத்துக்குடி: முள்ளக்காடு கிராமசபையில் பரபரப்பு., “மூன்று நாட்களாக அமைச்சரை சந்திக்க முடியவில்லை” – உப்பள அதிபர்கள் வேதனை.!
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டத்தின் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம், முள்ளக்காடு ஊராட்சியில் கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய உதவியாளர் முருகன் தலைமை வகித்தார். ஊராட்சி எழுத்தர் சங்கரசுப்பிரமணியன், மக்கள் நலப் பணியாளர் ஆனந்தகுமார், கணினி இயக்குநர் திவ்யா மற்றும் நூலகர் ரத்தினபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டப் பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திடக்கழிவு மேலாண்மை விதிகள்–2026, பழைய குப்பைக் கொட்டும் இடங்களை அகற்றுதல் மற்றும் கழிவுகளை தரம் பிரித்து கையாளுதல் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிலையில், கோவளம் பண்பாடு உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த பிரபாகரன், ராஜ், ஸ்ரீராம், சண்முகநாதன் உள்ளிட்ட உப்பள அதிபர்கள் கூட்டத்தில் பங்கேற்று எதிர்ப்பு தெரிவித்தனர். கிராம மக்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டதன் காரணம் குறித்து அவர்கள் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அதிகாரிகள், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி சுகாதார தொடர்பான சிறப்பு கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டதாக தெரிவித்தனர்.
அப்போது பேசிய உப்பள அதிபர் பிரபாகரன், “முள்ளக்காடு பகுதியில் உள்ள உப்பளங்களை கையகப்படுத்தி கப்பல் கட்டும் தளம் அமைக்கக் கூடாது. இதனால் சுற்றுச்சூழலும் உப்புத் தொழிலும் பாதிக்கப்படும். இதுகுறித்து கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
மேலும் அவர் கூறுகையில், “கப்பல் கட்டும் தளத் திட்டம் குறித்து விளக்கம் பெறவும், கோரிக்கைகளை தெரிவிக்கவும் சங்க நிர்வாகிகள் மூன்று நாட்களாக சென்னையில் தொழில்துறை அமைச்சரை சந்திக்க காத்திருக்கின்றனர். ஆனால் இதுவரை சந்திக்க முடியவில்லை. உப்புத் தொழிலை பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் ஏற்க முடியாது” என்றார்.
ஆனால் கிராமசபை கூட்டத்தில் இதுபோன்ற தீர்மானம் நிறைவேற்ற அதிகாரிகள் மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, “கப்பல் கட்டும் தளம் வேண்டாம்” என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி உப்பள அதிபர்கள் கோரிக்கை மனுவை அதிகாரிகளிடம் வழங்கினர்.
மேலும், மக்கள் நலப் பணியாளராக பணியாற்றுபவர் அந்த ஊரைச் சேர்ந்தவராக இருக்கக் கூடாது என்ற விதிமுறை உள்ள நிலையில், முள்ளக்காட்டைச் சேர்ந்தவரே அந்தப் பொறுப்பில் இருப்பதாகவும் சிலர் குற்றச்சாட்டு முன்வைத்தனர்.
இந்த சம்பவத்தால் கிராமசபை கூட்டத்தில் சிறிதுநேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. அதிகாரிகள் மனுவை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
துப்பறிவாளன் மணி