தூத்துக்குடியில் குடிநீர் தட்டுப்பாடு: 6 நாட்களாக தவிக்கும் மக்கள்!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகரில் கடந்த சில நாட்களாக குடிநீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பைப் லைன் உடைப்பு, மெயின் வால்வு பழுது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாநகரின் பல பகுதிகளுக்கு முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.
குறிப்பாக, சில பகுதிகளில் கடந்த 6 நாட்களாக குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை. இதனால் முதியவர்கள், பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அன்றாட தேவைகளுக்கும், உணவு சமைப்பதற்கும் குடிநீர் கிடைக்காமல் தவித்து வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்..
இந்நிலையில், தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான ஸ்ரீநாத், கடந்த 2 நாட்களாக தூத்துக்குடியில் இருந்ததாக கூறப்படும் நிலையில், குடிநீர் பிரச்சினை தொடர்பாக மாநகராட்சி ஆணையர் அல்லது அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தவில்லை.
தூத்துக்குடி மாநகருக்கு குடிநீர் கொண்டு வரப்படும் முக்கிய நீராதாரமான வல்லநாடு ஆற்றுப்படுகையிலும் நீரின் அளவு குறைந்துள்ள நிலையில், தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் ஸ்ரீநாத் நேரடியாக வல்லநாடு பகுதிக்கு சென்று குடிநீர் ஆதாரம் குறித்து ஆய்வு செய்யாதது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு சுமார் 100 நாட்கள் கடந்துள்ள நிலையில், தொகுதி மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றான குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் எம்.எல்.ஏ. ஸ்ரீநாத் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என ஒரு தரப்பினர் குற்றம்சாட்டுகின்றனர்.
தூத்துக்குடி குடிநீர் பிரச்சினை மற்றும் தொகுதி மக்களின் அடிப்படை தேவைகள் தொடர்பாக தமிழக முதலமைச்சருக்கும் புகார் மனு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு, வரும் காலங்களிலாவது தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான ஸ்ரீநாத் நேரடியாக களத்தில் இறங்கி குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுப்பாரா? என்ற எதிர்பார்ப்பு தொகுதி மக்களிடையே எழுந்துள்ளது.
துப்பறிவாளன் மணி