மின் கம்பம் அருகே கருப்பு பையில் எலும்புக்கூடு – தூத்துக்குடியில் பரபரப்பு.!

மின் கம்பம் அருகே கருப்பு பையில் எலும்புக்கூடு – தூத்துக்குடியில் பரபரப்பு.!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட மட்டக்கடை அருகே உள்ள பார்த்தசாரதி சாலையில் மின் கம்பம் அருகே கருப்பு பையில் எலும்புக்கூடு கிடந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சாலை வழியாக தினமும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் என ஏராளமானோர் சென்று வரும் நிலையில், சாலையோர மின் கம்பம் அருகே கருப்பு பையில் எலும்புக்கூடு இருப்பதை அப்பகுதி மக்கள் கவனித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து உடனடியாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த பையில் இருந்தது உண்மையான மனித எலும்புக்கூடா அல்லது மாந்திரீகம் போன்ற செயல்களுக்கு யாராவது கொண்டு வந்து இங்கு போட்டுச் சென்றதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தூத்துக்குடி மாநகர காவல் கண்காணிப்பாளர் சுனில் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார். கருப்பு பையில் இருந்த எலும்புகள் ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன.

அத்துடன், சம்பவம் குறித்து தெளிவுபடுத்த அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

 பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.