வியாபாரிகள் பிரச்சினையா? அரசியல் களமா?
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஏரலில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் வாரச் சந்தையில் வியாபாரிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இதனை ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்எல்ஏ அன்னை வி.ஜி. சரவணன் பேரூராட்சி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு பின்னர் பேரூராட்சி நிர்வாகம் வாரச் சந்தையை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்தது. இந்த அறிவிப்பால் வியாபாரிகளும் பொதுமக்களும் சிரமத்திற்கு ஆளான நிலையில், வாரச் சந்தை நடைபெறும் நாளில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சந்தை மீண்டும் செயல்பட எம்எல்ஏ சரவணன் நடவடிக்கை எடுத்து சந்தை திறக்கப்பட்டுள்ளது..
இதற்கிடையில், முன்னாள் அமைச்சர்கள் திமுகவை சேர்ந்த அனிதா ராதாகிருஷ்ணன், அதிமுகவை சேர்ந்த எஸ்.பி. சண்முகநாதன் உள்ளிட்ட திமுக, அதிமுக, பாஜக, அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால், பேரூராட்சி செயல் அலுவலர், "தன்னை யாரும் மிரட்டவில்லை" என்றும், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத மாற்று இடத்தில் வாரச் சந்தையை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், எம்எல்ஏ சரவணனும், "வியாபாரிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையிலேயே தலையிட்டேன். வியாபாரிகளும் பொதுமக்களும் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே வாரச் சந்தை மீண்டும் நடைபெற நடவடிக்கை எடுத்தேன். என்மீது தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன" என்று விளக்கம் அளித்துள்ளார்.
இந்தச் சம்பவம் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது. வியாபாரிகளின் வாழ்வாதாரப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்குப் பதிலாக, அது அரசியல் விவாதமாக மாறுவது யாருக்கு பயன் தருகிறது? இந்த கேள்விக்கு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வாரச் சந்தை மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது என்பது வியாபாரிகளுக்கு நிம்மதியை அளித்தாலும், இந்த விவகாரம் அரசியல் குற்றச்சாட்டுகளாக மாறியிருப்பது, உண்மையான பிரச்சினையின் தீர்வை விட அரசியல் விவாதமே அதிக கவனம் பெற்றிருப்பதை காட்டுகிறது.
அதுமட்டுமல்ல, அரசியல் ரீதியாக வெவ்வேறு அணிகளில் இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்.பி. சண்முகநாதன் ஆகியோர் ஒரே இடத்தில் அருகருகே அமர்ந்து ஆலோசனை நடத்திய காட்சியும் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
பொதுவாக ஒருவரையொருவர் கடுமையாக விமர்சிக்கும் எதிர்க்கட்சித் தலைவர்கள், இந்த விவகாரத்தில் ஒரே நேரத்தில் குரல் கொடுத்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. இதனை, விஜய் தலைமையிலான TVK-வின் அரசியல் வளர்ச்சியை எதிர்கொள்ளும் சூழலில் எதிர்க்கட்சிகள் சில விவகாரங்களில் ஒருங்கிணைந்து செயல்படத் தொடங்கியிருக்கலாம் என்ற அரசியல் விவாதங்களும் எழுகின்றனர்.
செய்தியாளர் மு.மணிகண்டன்