தூத்துக்குடி மேயருக்கு புதிய பொறுப்பு.!
தமிழகம்: திமுக கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று (14.05.2026) சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில், சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து விரிவான ஆலோசனை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், தேர்தல் முடிவுகளை தொகுதிவாரியாக ஆய்வு செய்யும் நோக்கில் 36 பேர் கொண்ட சிறப்பு குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த குழுவினர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள், தொகுதி பார்வையாளர்கள், நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்களை நேரடியாக சந்தித்து கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை சேகரிக்க உள்ளனர்.
கள ஆய்வு அடிப்படையில் தயாரிக்கப்படும் விரிவான அறிக்கை, வரும் ஜூன் 5ஆம் தேதிக்குள் மு.க. ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடலூர் கிழக்கு, நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் இந்த ஆய்வுப் பணிகளை ஒருங்கிணைக்க, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் பூச்சி எஸ். முருகன் ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கை, கட்சியின் எதிர்கால தேர்தல் வியூகங்களை வலுப்படுத்தும் முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது..
செய்தியாளர் மு.மணிகண்டன்