ஜனநாயகன் ரிலீஸ் எப்போது?? தூத்துக்குடியில் தயாரிப்பாளர் பேட்டி.!

ஜனநாயகன் ரிலீஸ் எப்போது?? தூத்துக்குடியில் தயாரிப்பாளர் பேட்டி.!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடாகவும், சிறந்த பரிகார தலமாகவும் விளங்கி வருகிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வரும் நிலையில், திரைப்பட வெற்றிக்காக நடிகர்கள், நடிகைகள் மற்றும் தயாரிப்பாளர்களும் இக்கோவிலுக்கு வருகை தருவது வழக்கமாக உள்ளது.

இந்த நிலையில், தமிழக முதல்வரும் விஜய் நடித்துள்ள கடைசி திரைப்படமான ஜனநாயகன் விரைவில் வெளியாக உள்ளது. படம் மாபெரும் வெற்றியடைய வேண்டி, தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணன் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.

கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவன உரிமையாளருமான அவர், கோவிலில் மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட அனைத்து பரிவார தெய்வங்களையும் தரிசனம் செய்தார்.

அதனைத் தொடர்ந்து, எதிரிகளை வீழ்த்தும் சக்தி கொண்டதாக நம்பப்படும் சத்ருசம்கார மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனை நடைபெற்றது. இந்த பூஜையில் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணன் அரை மணி நேரத்திற்கும் மேலாக கலந்து கொண்டு வழிபட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழக முதல்வர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் வெற்றியடைய வேண்டி இன்று சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. படம் வெளியீட்டு தேதி குறித்து இன்னும் இரண்டு வாரங்களுக்குள் முடிவு செய்யப்படும்.

திரைப்படத்தில் “தளபதி விஜயா” அல்லது “முதல்வர் விஜயா” என்ற பெயர் பயன்படுத்தப்படுமா என்பது குறித்து, முதல்வர் விஜய் அறிவித்த பிறகே அதிகாரப்பூர்வ முடிவு தெரிவிக்கப்படும் என்றும் கூறினார்.