குடும்பத் தகராறு கொலையில் முடிந்தது: மகனை எரித்த தந்தை கைது.!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகர், மடத்தூர் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தாளமுத்து இவரது மகன் அருள்ராஜ் (32). ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார்.இவர், நீண்டகாலமாக மதுப் பழக்கத்திற்கு அடிமையாக இருந்து வந்ததாகவும், கடந்த 2021-ஆம் ஆண்டு குடிபோதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்ற பின்னரும் மீண்டும் மதுப் பழக்கத்திற்கு ஆளாகி, அடிக்கடி குடும்பத்தினருடன்
தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அருள்ராஜ் தனது தாயை தாக்கி காயப்படுத்தியதுடன், வீட்டிற்கு வந்திருந்த தனது சகோதரி மற்றும் அவரது குழந்தையையும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தட்டிக் கேட்ட தந்தை தாளமுத்துவுடன் வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, வீட்டின் முன்பகுதியில் தூங்கிக் கொண்டிருந்த அருள்ராஜ் மீது, வீட்டில் பெயிண்டிங் பணிக்காக வைத்திருந்த தின்னர் போன்ற எரியக்கூடிய திரவத்தை தாளமுத்து ஊற்றி தீ வைத்துள்ளார்.
இதில் அருள்ராஜ் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார்.
தகவலறிந்த சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் தனசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தாளமுத்துவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்பத் தகராறில் நிகழ்ந்த இந்த கொலை சம்பவம் மடத்தூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது..
செய்தியாளர் மு.மணிகண்டன்