“தூத்துக்குடியில் அரசியல் பரபரப்பு… கட்சி தாவலுக்கு கறி விருந்து ட்ரீட்!”
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் புதிய அரசியல் நகர்வுகள் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நீண்ட காலமாக திமுக, அதிமுக, பாஜக-வில் இருந்த நிர்வாகிகள் தற்போது தமிழக வெற்றி கழகத்தில் இணைய தயாராக இருப்பதாக சொல்லப்படுகிறது.
தூத்துக்குடி மற்றும் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு அமைச்சரவை முக்கியத்துவம் கிடைத்திருப்பது அரசியல் களத்தையே சூடுபிடிக்க வைத்துள்ள நிலையில். “அமைச்சர் பதவி வந்தாச்சு… இனிமேல் அந்த ஏரியாவில்தான் செட்டில் ஆகணும்… அங்க போனா அரசியலும் வளரும், வாழ்க்கையும் வளரும்” என்ற கணக்கில் சிலர் ஏற்கனவே புதிய கட்சிக்கான சட்டை அளவு எடுக்க ஆரம்பித்துவிட்டார்களாம்!
அதிலும் சுவாரஸ்யம் என்னவென்றால், முன்னாடி தமிழக வெற்றி கழகத்திலிருந்து திமுக, அதிமுகவுக்கு சென்ற சிலர் கூட “அங்க போய்ட்டு பார்த்தோம்… இப்போ பழைய ஏரியாதான் செம மாஸ்!” என மீண்டும் தாய்க் கழகத்திற்கே திரும்ப தயாராக உள்ளார்களாம். இதனால் அரசியல் வட்டாரங்களில் “இது கட்சி தாவலா… இல்ல டூர் பேக்கேஜா?” என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
இந்த திடீர் அரசியல் அலை மாற்றத்தை பார்த்த தூத்துக்குடியில் உள்ள திமுக முக்கிய நிர்வாகியான ஒருவர் உடனடியாக கட்சியினரை அழைத்து அவசர ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தி இருக்கின்றார்.. கூட்டத்தில், “யாரும் டென்ஷன் ஆகாதீங்க… கட்சி பெரிய கடல்… சில மீன்கள் போனாலும் அலை நிக்காது!” என உற்சாகப்படுத்தியுள்ளாராம்.
மேலும், “கட்சியின் வளர்ச்சிக்கும் மக்கள் சேவைக்கும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என பேசிய நிர்வாகி, கூட்டம் முடியும் முன்பே “முதல்ல சாப்பாடு பக்கம் ஒன்றிணைவோம்!” என கறி விருந்துக்கு அழைத்தாராம்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு கறி விருந்தில், அரசியல் விவாதத்தை விட “மட்டன் சூப்பரா இருக்கு”, “கோழி கிரேவி இன்னும் கொஞ்சம் போடுங்க” என்ற கோஷங்களே அதிகமாக கேட்டதாம். சிலர் “கட்சியிலிருந்து யார் போறாங்கன்னு தெரியல… ஆனா மட்டன் மட்டும் எங்கும் போகக்கூடாது!” என ஜாலியாக பேசியதாகவும் கூறப்படுகிறது.
தற்போது இந்த நிகழ்வுகள் அனைத்தும் தூத்துக்குடி மற்றும் ஒட்டப்பிடாரம் பகுதிகளில் அரசியல் மாற்றத்திற்கான முன்னோட்டமாகவே பார்க்கப்படுகின்றன. வரவிருக்கும் அரசியல் சூழலில் இந்த நகர்வுகள் எந்த வகையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்..
செய்தியாளர் மு.மணிகண்டன்