2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு சபரீசன் அரசியல் களத்தில் அதிகாரப்பூர்வ நுழைவு.!

2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு சபரீசன் அரசியல் களத்தில் அதிகாரப்பூர்வ நுழைவு.!

மறைமுக அதிகாரம் முடிந்து வெளிப்படை பிரவேசம், தூத்துக்குடியில் திமுக நிர்வாகிகளை சந்தித்த தமிழக முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசன்.!

2026 தமிழக சட்டசபை தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் வேகமாக செயல்பட்டு வருகின்றன. கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு உள்ளிட்ட விவகாரங்களில் கட்சி தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மருமகன் சபரீசன், தி.மு.க. தேர்தல் பணிகளில் நேரடியாக ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருவது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை நடைபெற்ற சட்டசபை, நாடாளுமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் சபரீசன் கட்சி விவகாரங்களில் நேரடியாக தலையிடவில்லை. இருப்பினும், கட்சி நிலவரம் குறித்து அவ்வப்போது கேட்டறிந்ததாகவும், சில தேர்தல் சமயங்களில் தனக்கு நெருக்கமானவர்களுக்காக பரிந்துரை செய்ததாகவும் தகவல் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே, தமிழகம் முழுவதும் உள்ள தொகுதி நிர்வாகிகளுடன் ஒன் டூ ஒன் நேரடி சந்திப்புகள் நடத்தி, கட்சியின் செயல்பாடு, வெற்றிவாய்ப்பு நிலவரம், தொகுதி நிர்வாக அமைப்பு போன்ற விவரங்களை சபரீசன் கேட்டறிந்து வருகிறார்.

தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு, சபரீசன் தனது அரசியல் பிரவேசத்தை வெளிப்படையாக காட்டியுள்ளார். கூட்டத்தில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் என இரு பிரிவினருடனும் தனித்தனியாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

கூட்டத்தில் பேசிய சபரீசன், கட்சியின் கொள்கைகளையும் மக்கள் நல திட்டங்களையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். "2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை தலைவர் நிர்ணயித்துள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது போல, 234 தொகுதிகளிலும் முழுமையான வெற்றியை பெற அனைவரும் ஒற்றுமையுடன் களப்பணியாற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளதாக  கூறப்படுகிறது..

தேர்தல் நெருங்குவதால் பல நிர்வாகிகள் வேட்பாளர் கனவுடன் சபரீசனை சந்தித்து பேசியதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிகழ்வின் மூலம், தமிழக சட்டசபை தேர்தல் பணிகளில் தி.மு.க.வில் சபரீசனின் பங்கு அதிகரித்துள்ளதாகவும், கட்சி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. 

அதுமட்டுமல்ல, திமுகவின் தேர்தல் வியூகங்களை திட்டமிடுவதிலும், டிஜிட்டல் ஊடகப் பணிகளை ஒருங்கிணைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு ஆலோசனை  நிறுவனமாக பென் நிறுவனம் என்ற ஒரு வியூகக் குழு செயல்பட்டு வருகிறது.

முன்னதாக, இந்த குழுவின் தலைமையை தற்போது தமிழக வெற்றி கழகத்தில் இருக்கும் (நடிகர் விஜய் கட்சி ) ஆதவ் அர்ஜுன் ஏற்றிருந்தார்.. தற்போது இந்த நிறுவனம், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மருமகன் சபரீசன் வழிகாட்டுதலில் செயல்படுவதாகவும், அதன் தலைவராக அனந்து என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது..

செய்தியாளர் மு.மணிகண்டன்