காவலருடன் திருமணத்தை மீறிய உறவு; கணவரிடம் வசமாக சிக்கிய பெண் போலீஸ்.!

காவலருடன் திருமணத்தை மீறிய உறவு; கணவரிடம் வசமாக சிக்கிய பெண் போலீஸ்.!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம்,  ஒட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணியாற்றி வந்தவர் விக்னேஷ். இவர் 12 ஆண்டுகளுக்கு மேலாக தூத்துக்குடி மாவட்ட தனிப்பிரிவில் பணியாற்றி வருகிறார். பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரியும்போது, அங்கு வரும் பெண்கள் மற்றும் பெண் காவலர்களின் செல்ஃபோன் எண்ணை வாங்கி, முதலில் அவர்களிடம் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அதைத் தொடர்ந்து, பல பெண்களை மிரட்டி விக்னேஷ் தனது ஆசைக்கு இணங்க வைத்ததாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில், அவர் பல்வேறு காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றமும் செய்யப்பட்டுள்ளார். ஆனால் அரசியல் செல்வாக்கால் தனிப்பிரிவில் இருந்து மாற்றப்படாமல், அதிலேயே பணிபுரிந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அந்த வகையில், தற்போது ஒட்டப்பிடாரம் காவல் நிலைய தனிப்பிரிவு காவலராக பணியாற்றி வந்துள்ளார்.

இதனிடையே, ஒட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த பெண் உதவி ஆய்வாளர் அருள்மொழி ஸ்ரீ என்பவருடன் ஒரு வருடத்திற்கு மேலாக விக்னேஷ் திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்துள்ளார்.

இதை அறிந்த ஒட்டப்பிடாரம் காவலர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மறைமுகமாக தெரிவிக்க முயற்சித்தும், தனிப்பிரிவில் இருக்கும் உயரதிகாரிகள் அதனை காவல் கண்காணிப்பாளரிடம் தெரிவிக்காமல் மறைத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதுபோன்ற சூழலில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெண் உதவி ஆய்வாளரின் செல்ஃபோனுக்கு அவர்கள் இருவரும் தனிமையில் இருந்த புகைப்படங்கள், ஆபாச வார்த்தைகள் அடங்கிய குறுஞ்செய்தி ஆகியவற்றை விக்னேஷ் அனுப்பியுள்ளார்.

அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அருள்மொழியின் கணவர் சதீஷ், இதுகுறித்து மனைவியிடம் கேட்டுள்ளார். இதனால் கணவர் - மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த அருள்மொழியின் கணவர் சதீஷ், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டபோது, விக்னேஷ் - அருள்மொழி ஸ்ரீ இடையேு திருமணத்தை மீறிய உறவு இருந்தது ஊர்ஜிதம் ஆகியுள்ளது. இதையடுத்து காவல் உதவி ஆய்வாளர் அருள்மொழியை சூரங்குடி காவல் நிலையத்திற்கும், தனிப்பிரிவு காவலர் விக்னேஷை மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்திற்கும் பணியிடம் மாற்றம் செய்து தூத்துக்குடி மாவட்ட பொறுப்பு காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.

இந்த சம்பவத்திலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள, விக்னேஷ் அரசியல் பிரமுகர்களை நாடியதாகவும் கூறப்படுகிறது. இருந்தாலும், ஒரே காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர்கள் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததும், அவர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படாமல் வேறு காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது