ஆக்கிரமிப்பாளருக்கு ஆப்பு: பல கோடி ரூபாய் மதிப்புள்ள மாநகராட்சி நிலம் மீட்பு.!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான, ஆசிரியர் காலனி மெயின் ரோடு ரவுண்டானா அருகே பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம், சுமார் 20 ஆண்டுகளாக தனிநபர் ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்டு வந்துள்ளது. இதனை மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து அந்த இடத்தை முழுமையாக மீட்டுள்ளது. இருந்தும் அந்த இடம் ஆக்கிரமிப்பு பல ஆண்டுகளாக நீடித்து வந்ததாக கூறப்படுகிறது.
மாநகராட்சி நிர்வாகம் அவ்வப்போது ஆக்கிரமிப்பை அகற்றினாலும், சம்பந்தப்பட்ட நபர் மீண்டும் மீண்டும் அதே இடத்தை ஆக்கிரமித்து வந்ததால், இது தீர்வு காணப்படாத பிரச்சினையாகவே இருந்து வந்தது.
இந்த நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், அந்த இடம் மாநகராட்சிக்கு சொந்தமானது என்பதை தெரிவிக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் அறிவிப்பு பலகை நிறுவப்பட்டது. இருப்பினும், மீண்டும் ஆக்கிரமிப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, கடந்த வாரம் மாநகராட்சி நிர்வாக அதிகாரிகளுடன் இணைந்து ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்றி மீட்கப்பட்ட இடத்தில் சாலை அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டது.
இதன் ஒரு பகுதியாக, மேயர் ஜெகன் சம்பந்தப்பட்ட இடத்தை அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, சாலை விரிவாக்கப் பணிக்கு இடையூறாக உள்ள மரத்தை உடனடியாக அகற்றி, சாலையை விரிவுப்படுத்தி தரமான முறையில் அமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும், "இரண்டு நாட்களுக்குள் சாலை அமைக்கும் பணியை நிறைவு செய்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்" என்று அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஆக்கிரமிக்கப்பட்டு வந்த இந்த இடத்தில் நிரந்தர தீர்வு காணும் வகையில், சாலை அமைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
பல கோடி ரூபாய் மதிப்புள்ள மாநகராட்சி நிலம் மீட்கப்பட்டதுடன், அந்த இடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சாலையாக மாற்றப்பட்டிருப்பது, எதிர்காலத்தில் மீண்டும் ஆக்கிரமிப்பு நடைபெறாமல் தடுக்கும் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
செய்தியாளர் மு.மணிகண்டன்