ஒரு மணி நேரத்தில் 16 பவுன் நகை மீட்பு.!
தூத்துக்குடி: ஒரு மணி நேரத்தில் 16 பவுன் நகை மீட்பு., செல்போன் சிக்னல் மூலம் ஹேண்ட்பேக்கை கண்டுபிடித்த எட்டையாபுரம் போலீசார்
தூத்துக்குடி மாவட்டம், எட்டையாபுரம் அருகே உள்ள வீரப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு சென்னை வியாசர்பாடி சாமியார்தோட்டம் பகுதியை சேர்ந்த பாலமுருகன் மற்றும் அவரது மனைவி சாந்தி ஆகியோர் சென்னையிலிருந்து கோவில்பட்டி வரை ரயிலில் வந்து, பின்னர் கடலையூர் வழியாக ஆட்டோவில் சொந்த ஊரான வீரப்பட்டிக்குச் சென்றுள்ளனர்.
அப்போது அவர்கள் கொண்டு வந்த டிராவல் பேக், ஹேண்ட்பேக் மற்றும் சிறிய அளவிலான ஹேண்ட்பேக் ஆகியவற்றை ஆட்டோவின் பின்பகுதியில் வைத்திருந்தனர். வீரப்பட்டியில் இறங்கி பார்த்தபோது, ஆட்டோவின் பின்கதவு திறந்திருந்ததுடன், சிறிய அளவிலான ஹேண்ட்பேக் காணாமல் போனது தெரியவந்தது.
அந்த ஹேண்ட்பேக்கில் 16 பவுன் தங்க நகைகள், வளையல், கம்மல், செயின், கைச்செயின் மற்றும் REDMI செல்போன் உள்ளிட்ட பொருட்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாலமுருகன் மற்றும் சாந்தி உடனடியாக எட்டையாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து போலீசார், ஹேண்ட்பேக்கில் இருந்த செல்போனின் லொகேஷன் சிக்னலை வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த செல்போன் சிக்னல் கடலையூர் – வீரப்பட்டி சாலையிலிருந்து சுமார் 30 மீட்டர் தொலைவில் காட்டியதாக கூறப்படுகிறது.
போலீசார் அங்கு சென்று தேடியபோது, காணாமல் போன ஹேண்ட்பேக் மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் ஹேண்ட்பேக்கில் இருந்த 16 பவுன் தங்க நகைகள் மற்றும் செல்போன் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் மீட்கப்பட்டன.
விளாத்திகுளம் டி.எஸ்.பி சுந்தரபாண்டியன் மற்றும் காவல் ஆய்வாளர் மணிகண்டன் தலைமையிலான போலீசார், மீட்கப்பட்ட நகைகள் மற்றும் பொருட்களை சாந்தி மற்றும் பாலமுருகனிடம் சரிபார்த்து ஒப்படைத்தனர். தவறவிட்ட 16 பவுன் தங்க நகைகள் மற்றும் செல்போனை ஒரு மணி நேரத்திற்குள் செல்போன் சிக்னல் மூலம் கண்டுபிடித்து மீட்டுக் கொடுத்த காவல்துறையினருக்கு பாலமுருகன் மற்றும் சாந்தி நன்றியை தெரிவித்தனர்.
மேலும், நகைகள் இருந்த ஹேண்ட்பேக்கை மண்ணுக்குள் புதைத்து வைத்த மர்மநபர் யார் என்பது குறித்து எட்டையாபுரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் மு.மணிகண்டன்