த. வெ. க. கோஷ்டி பூசலா? என்ன நடக்கிறது தூத்துக்குடியில்..
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கட்டாலங்குளத்தில் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் 316வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவருட்சிலைக்கு அமைச்சர்கள் ஸ்ரீநாத், மதன் ராஜா மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் ஆகியோர் அரசு சார்பில் காலை 10.30 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அமைச்சர்கள் வருவதற்கு தாமதம் ஆனதால் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அரசு சார்பில் அழகு முத்து கோன் திருவுருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன்ராஜா, மாவட்ட ஆட்சியருடன் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதன் பிறகு சிறிது நேரம் கழித்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், மாவட்ட ஆட்சியருடன் தனியாக வந்து அழகுமுத்துக்கோன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அரசு விழா என்று அறிவித்துவிட்டு மாவட்ட ஆட்சியர் ஒருமுறை, இரண்டு அமைச்சர்கள் தனித்தனியே என 3 முறை நடந்த நிகழ்ச்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அரசு விழா, த. வெ. க கோஷ்டி பூசல் விழாவாக மாறியது விழாவிற்கு வந்திருந்தவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வழக்கமாக மாவட்ட ஆட்சியர், அமைச்சர்கள் எல்லோரும் ஒருங்கிணைந்து மாலை அணிவித்து மரியாதை செய்து, அழகுமுத்துக்கோன் வாரிசுகளை கௌரவப்படுத்துவது, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால் இந்த முறை எந்த விழாவும் நடைபெறவில்லை.
அமைச்சர்கள் வருவது தாமதம் ஏற்பட்டதால், மற்றவர்களை சென்று மரியாதை செய்ய சொல்வதில் காவல்துறையினருக்கும் கொஞ்சம் தயக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் மு.மணிகண்டன்