திருச்செந்தூர் கோவிலில் அமைச்சரிடமே 4000 வசூல்? அர்ச்சகர்கள் செய்த செயலால் அதிர்ச்சி.!

திருச்செந்தூர் கோவிலில் அமைச்சரிடமே 4000 வசூல்?  அர்ச்சகர்கள் செய்த செயலால் அதிர்ச்சி.!

தூத்துக்குடி: முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பக்தர்கள் அதிகம் வருகை தரும் புகழ்பெற்ற ஆன்மிகம் மற்றும் சுற்றுலா தலமாகும். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வரும் நிலையில், திருவிழா மற்றும் விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கானோர் திரளுவது வழக்கம்.

இந்த நிலையில், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் திடீர் ஆய்வுக்காக வந்திருந்தார். அப்போது அமைச்சர் தனியாக கோவில் வளாகத்திற்குள் சென்று, அங்கிருந்த அர்ச்சகர்களிடம் “சுவாமி தரிசனம் செய்வதற்கு கட்டணம் எவ்வளவு?” என கேட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு அர்ச்சகர்கள், “ஒருவருக்கு 1000 வழங்க வேண்டும்” என கூறிய நிலையில் தொடர்ந்து 4 பேருக்கு 4000 தொகையை அர்ச்சகர்கள் பெற்றதாகவும், அந்த தொகை ஜிப்பே (GPay) மூலம் பரிமாறப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பின்னர் அமைச்சர் கோவிலின் அன்னதான கூடத்திலும் ஆய்வு மேற்கொண்டதாகவும், அங்கு இருந்த அதிகாரிகளிடம் இந்த விவகாரம் குறித்து கடும் அதிருப்தி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது..

இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் எக்ஸ் வலைதளத்தில் கூறி இருப்பதாவது: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களின் தரிசனம், அன்னதானம், அடிப்படை வசதிகள், சொத்து பதிவுகள், திருப்பணிகள் மற்றும் கோவிலுக்கு வரவேண்டிய நிலுவை வருவாய் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம்.

முறைகேடுகளில் யார் தொடர்புடையவராக இருந்தாலும், எந்த வித பாரபட்சமும் இன்றி விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருக்கின்றார்..

அமைச்சரிடமே 4000 தொகையை, அதுவும் GPay மூலம் பெற்ற சம்பவம் தற்போது பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.