காத்திருந்து... காத்திருந்து... காலங்கள் போகுதையா...! – சட்டமன்ற அலுவலகத்தில் மணிக்கணக்கில் காத்திருந்த பொதுமக்கள்.!
தூத்துக்குடி: தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும், மீன்வளத்துறை அமைச்சருமான ஸ்ரீநாத் வாரத்தின் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து பொதுமக்களின் குறைகளை கேட்டு மனுக்கள் பெறுவது வழக்கம். இந்த நிலையில் சமீப நாட்களாக நடைபெறக்கூடிய அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ஒரு மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை தாமதமாகவே நிகழ்ச்சிகளில் அமைச்சர் ஸ்ரீநாத் கலந்து கொள்கிறார்.
இந்த நிலையில் இன்று தூத்துக்குடி டூவிபுரத்தில் அமைந்துள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் காலை 8 மணிக்கு மக்கள் குறைகளை கேட்டு மனுக்களை வாங்க இருப்பதாக நேற்று அறிவிப்பு வெளியானது.
இதனைத் தொடர்ந்து இன்று காலை 8:00 மணி முதலே சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு பெண்கள் மற்றும் முதியவர்கள் என ஏராளமானோர் மனு கொடுப்பதற்காக காத்திருந்தனர். தங்கள் பகுதியில் கழிவு நீர் தேங்கி இருப்பது, குடிநீர் வராதது, உதவித்தொகை வராதது என பல்வேறு கோரிக்கைகளை கொண்டு காலை முதலே வெயிலுக்கு முன்பாக மனுவை கொடுத்துவிட்டு சென்று விட வேண்டும் என காத்திருந்தனர்.
ஆனால் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் எட்டு மணிக்கு பதிலாக தற்போது 11:30 மணி வரை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வரவில்லை என்பதால் மனு கொடுக்க வந்த மக்கள் அமைச்சருக்காக காத்துக் கிடக்கும் அவலம் தான் நிலவுகிறது. இப்படி மக்கள் பிரதிநிதி குறித்த நேரத்திற்கு வராமல் மக்களை காக்க வைப்பது எந்த வகையிலான மாற்றம் என தெரியாமல் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
துப்பறிவாளன் மணி