பனிமய மாதா திருவிழா டிஜிட்டல் போர்டுக்கு தடை.?

பனிமய மாதா திருவிழா டிஜிட்டல் போர்டுக்கு தடை.?

தூத்துக்குடி: தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற பனிமய மாதா பேராலய ஆண்டு திருவிழா வரும் 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. இந்நிலையில், ஆண்டுதோறும் திருவிழாவையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் டிஜிட்டல் வாழ்த்து போர்டுகள் வைப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்த ஆண்டும் டிஜிட்டல் போர்டுகள் அமைப்பதற்காக நகரின் பல்வேறு பகுதிகளில் கம்புகள் கட்டப்பட்டிருந்த நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் திடீரென நடவடிக்கை எடுத்து, அனுமதியின்றி அமைக்கப்பட்டதாக  கூறி அந்த கம்புகளை அகற்ற முற்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தை அறிந்த தமிழக வெற்றிக் கழகத்தின் மத்திய மாவட்ட செயலாளர் சாம், திமுக வடக்கு மாவட்ட செயலாளர் கீதாஜீவன் ஆகியோர் மற்றும் கட்சி நிர்வாகிகள் சம்பவ இடத்துக்கு வந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது கட்சியினர் கூறுகையில், "பனிமய மாதா திருவிழாவிற்கு ஆண்டுதோறும் அனைத்து அரசியல் கட்சிகளும் டிஜிட்டல் போர்டுகள் வைத்து வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு மட்டும் அனுமதி கிடையாது என்று கூறுகிறார்கள். அதுவும் ஏன்  திருவிழாவிற்கு போர்டுகள் வைக்க அனுமதி வாங்கவில்லை என்று கேட்கிறார்கள். ஏன் எப்போதும் இல்லாத அளவில் இந்த ஆண்டு மட்டும் இவ்வளவு கெடுபிடி., 

மேலும் 10×10 அளவிலான போர்டுகள் மட்டுமே வைக்க வேண்டும் என புதிய நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. ஏன் இந்த திடீர் கட்டுப்பாடுகள்? என்று கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து மாநகராட்சி தரப்பில் விளக்கம் அளிக்கையில், "தமிழகத்தில் டிஜிட்டல் போர்டுகள் அமைப்பதற்கு பொதுவாக அனுமதி இல்லை. அனுமதியின்றி கம்புகள் அமைக்கப்பட்டிருந்ததால் அவை அகற்றப்படும். விதிமுறைகளின் படி மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தனர்.

ஆனால், ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் நடைமுறையில் இந்த ஆண்டு மட்டும் திடீரென கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது ஏன்? விதிமுறைகள் அனைவருக்கும் சமமாக அமல்படுத்தப்படுகிறதா? என்ற கேள்விகள் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளன.

இந்த விவகாரம் பனிமய மாதா திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் புதிய அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.