தூத்துக்குடி கவுன்சிலர் அலட்சிய பதில்., பொது மக்கள் குற்றசாட்டு.!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி 25-வது வார்டுக்கு உட்பட்ட சின்னக்கடை சந்து, இரட்சியபுரம் அருகே உள்ள மட்டக்கடை பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், தங்களது பகுதியில் சாலை மற்றும் கால்வாய் வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும் என மீன்வளத்துறை அமைச்சரும், தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினருமான ஸ்ரீ நாத்-திடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில், "எங்கள் பகுதியில் பல ஆண்டுகளாக சாலை மற்றும் கால்வாய் வசதி இல்லாததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கடந்த ஆட்சியினரிடம் பலமுறை கோரிக்கை வைத்தபோது, தேர்தலுக்குப் பிறகு பணிகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மேலும், கால்வாய்களில் அடைப்பு மற்றும் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் தெருக்களில் தேங்கி நிற்கிறது. இதனால் கொசு தொல்லை, துர்நாற்றம் மற்றும் சுகாதாரக் கேடுகள் ஏற்பட்டு, பொதுமக்கள் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்..
மேலும், இந்த பிரச்னைகள் குறித்து 25-வது வார்டு கவுன்சிலர் எடிண்டாவிடம் முறையிட்டபோது, "நீங்கள் விசில் சின்னத்திற்கு ஓட்டு போட்டீர்களே... அவர்களிடமே போய் உங்கள் கோரிக்கையை கூறுங்கள். என்னால் எதுவும் செய்ய முடியாது" என்று பதிலளித்ததாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனால், அரசியல் பாகுபாடு பார்க்காமல் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்றும், அமைச்சர் நேரில் ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
துப்பறிவாளன் மணி