சுகாதார சீர்கேடு முதல் டோக்கன் முறைகேடு வரை... தூத்துக்குடி அம்மா உணவகத்தில்.!

சுகாதார சீர்கேடு முதல் டோக்கன் முறைகேடு வரை... தூத்துக்குடி அம்மா உணவகத்தில்.!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் செயல்பட்டு வரும் 9 அம்மா உணவகங்களில் ஒன்றான ஸ்டேட் பேங்க் காலனி அம்மா உணவகத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது பல்வேறு முறைகேடுகள் மற்றும் சுகாதாரக் குறைபாடுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

முன்னதாக, ஸ்டேட் பேங்க் காலனியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமை மேயர் ஜெகன் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் அருகில் செயல்பட்டு வந்த அம்மா உணவகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்ட போது, பொதுமக்களுக்கு டோக்கன் வழங்காமல் உணவு விநியோகம் செய்யப்பட்டு வந்தது தெரியவந்தது. இதுகுறித்து மேயர் கேட்டபோது, அங்கு பணியாற்றிய ராஜலட்சுமி என்ற பெண் ஊழியர், "டோக்கன் வழங்க தேவையான பேப்பர் இல்லை என்று மாநகராட்சி அதிகாரிகளிடமும், ஆணையரிடமும் பலமுறை தெரிவித்தும் இதுவரை வாங்கித் தரவில்லை. அதனால் என்ன செய்ய முடியும்?" என வேதனையுடன் தெரிவித்தார்.

ஆய்வின்போது, அம்மா உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவுகள் மொத்தமாக ஹோட்டல்கள் மற்றும் தனியார் நிகழ்ச்சிகளுக்கும் வழங்கப்பட்டு வருவதாகவும் மேயர் நேரில் அறிந்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து உணவகம் முழுவதும் ஆய்வு செய்தபோது, சுகாதாரமற்ற முறையில் சமையலறை மற்றும் உணவகம் பராமரிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதுகுறித்து பணியாளர்களிடம் கேட்டபோது, "சுத்தம் செய்ய போதிய பணியாளர்கள் இல்லை" என அவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து மேயர் ஜெகன் கடும் அதிருப்தி தெரிவித்து, "நான் மாநகராட்சி மேயர். நான் கூறுவதை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு சுகாதாரமற்ற முறையில் உணவகம் நடத்தினால், உணவருந்த வரும் பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான முழுப் பொறுப்பும் மாநகராட்சிக்கே வரும். பொறுப்பற்ற வகையில் பதில் கூறக் கூடாது," என்று எச்சரித்தார்.

மேலும், ஆய்வின் போது உணவகத்தின் மற்றொரு பகுதியில் கரப்பான் பூச்சிகள், பல்லிகள் உள்ளிட்ட பூச்சிகள் காணப்பட்டன. இதுகுறித்து விளக்கம் கேட்டபோதும், அங்கு இருந்த நான்கு பணியாளர்களும் உரிய பதில் அளிக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் பிரியங்காவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மேயர் ஜெகன், ஸ்டேட் பேங்க் காலனி அம்மா உணவகத்தில் நடைபெற்றுவரும் முறைகேடுகள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அங்கு பணியாற்றும் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவும், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணிபுரியும் ஊழியர்களை இடமாற்றம் செய்யவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முழுமையான விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார்.

மேலும், வடக்கு மண்டல அம்மா உணவகங்களின் பொறுப்பாளராக உள்ள நரசிம்மன் என்பவருக்கும் இந்த முறைகேடுகளில் தொடர்பு இருப்பதாக கூறப்படுவதால், அவரின் செயல்பாடுகள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இதற்கிடையில், ஆய்வின் போது அங்கு பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர், "தமிழக அமைச்சர் ஒருவரின் ஆதரவு எனக்கு உள்ளது. என்னை பணிநீக்கம் செய்தாலும் அந்த அமைச்சர் பார்த்துக் கொள்வார்," என்று ஆணவமாக பேசியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தூத்துக்குடி மாநகராட்சியின் அம்மா உணவகங்களின் செயல்பாடு மற்றும் கண்காணிப்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடையே வலுத்துள்ளது.