தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் களேபரத்தை உண்டாக்கிய 51வது மாமன்ற உறுப்பினர் மந்திர மூர்த்தி.?
தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு:, தமிழக வெற்றி கழக உறுப்பினர்களுக்கு இருக்கை மறுப்பா? – தரையில் அமர்ந்து போராட்டம்.,
தூத்துக்குடி மாநகராட்சி மாமன்றக் கூட்டமானது மேயர் ஜெகன் தலைமையில், ஆணையர் பிரியங்கா முன்னிலையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ள இரு மாமன்ற உறுப்பினர்களை மையமாகக் கொண்டு பரபரப்பான சூழலானது ஏற்பட்டது.
அதாவது, தூத்துக்குடி மாநகராட்சியின் 51-வது வார்டில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மந்திரமூர்த்தியும், 17-வது வார்டில் திமுக சார்பில் வெற்றி பெற்ற ராமரும் தற்போது தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர். இதில், மந்திரமூர்த்தி அதிமுக மாநகராட்சி கொறடாவாக செயல்பட்டு வந்த நிலையில், அவரை அப்பதவியில் இருந்து நீக்கியதாக அதிமுக மாவட்ட செயலாளர் சண்முகநாதன் மாநகராட்சிக்கு கடிதம் வழங்கியிருந்தார்.
இந்த நிலையில், மாநகராட்சி கூட்ட அரங்கிற்கு வந்த மந்திரமூர்த்தி மற்றும் ராமர் ஆகியோர், தாங்கள் முன்பு அமர்ந்து வந்த அதாவது முதல் வரிசையில் அதே இருக்கையில் அமர அனுமதி வழங்க வேண்டும் என்று மேயர் ஜெகனிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு பதிலளித்த மேயர் ஜெகன், "அதிமுக மாவட்ட செயலாளர் சண்முகநாதன் அளித்துள்ள கடிதத்தின் அடிப்படையில் மந்திரமூர்த்தி கொறடா பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதற்கு பதில் 57 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜெயலெட்சுமி அதிமுக கொறடாவாக நியமனம் செய்யப்படுள்ளார். ஆகவே ஜெயலெட்சுமிக்கு அந்த இடத்தை வழங்கி இருக்கிறார்கள். எனவே, மந்திர மூர்த்தி பழைய அமர்வு ஏற்பாட்டை தொடர முடியாது," என்று தெரிவித்தார்.
இதனல் கூட்டத்தில் பரபரப்பும் பதற்றமும் நிலவியது. இதையடுத்து மந்திரமூர்த்தி மற்றும் ராமர் ஆகியோர் கூட்ட அரங்கின் தரையில் அமர்ந்து, தங்களுக்கு உரிய இருக்கை வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும், "அனுமதி வழங்க முடியாது" என்று மேயர் ஜெகன் உறுதியாக தெரிவித்தார்.
அப்போது "மேயர் ஜெகன் ஆவேசமாக, விஜய் ரீல்ஸ் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். மாநகரில் பெண்களுக்கு கூட பாதுகாப்பாக நடமாட முடியாத நிலை உள்ளது," என்று குற்றம்சாட்டினார்.
இதனைத் தொடர்ந்து, தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ள மாமன்ற உறுப்பினர்கள் குறித்து பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை முன்வைத்தனர். இதனால் கூட்டத்தில் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவியது.
இறுதிவரை மந்திரமூர்த்தி மற்றும் ராமர் தரையில் அமர்ந்தபடி தங்களது போராட்டத்தை தொடர்ந்த நிலையில், பின்னர் கூட்டத்தை விட்டு வெளி நடப்பு செய்தனர்.
இதனைதொடர்ந்து மேயர் ஜெகன் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அவர் கூறும் போது, நான்கரை ஆண்டு காலமாக மக்கள் பிரச்னையை மந்திர மூர்த்தி பேசாமல் வீடியோ எடுத்து ரிலீஸ் மட்டுமே போட்டு விட்டு போய்விடுவார். அவருக்கு இருக்கை மறுக்கப்படவில்லை.. இடம் கொடுக்கப்பட்டது.. ஆனால் அதை வைத்து அரசியல் செய்கிறார் மந்திரமூர்த்தி என்றார்..
செய்தியாளர் மு.மணிகண்டன்