தூத்துக்குடியில் பட்டப்பகலில் ஆடு திருட்டு!
தூத்துக்குடி: தூத்துக்குடி, முத்தம்மாள் காலனி பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. பால் வியாபாரம் செய்து வரும் இவர், தனது ஆடுகளை அப்பகுதியில் உள்ள தெருவோரங்களில் மேய்ச்சலுக்காக விடுவது வழக்கம் என கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 6-ஆம் தேதி காலை, வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்காக தெருவோரத்தில் விட்டுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள், பொதுமக்கள் நடமாட்டம் இருந்தபோதிலும் அசால்டாக ஒரு பெரிய ஆட்டை பிடித்து இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகிய நிலையில் ஆடு திருடப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஆடு திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக அதன் உரிமையாளர் மாரிமுத்து, சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, ஆட்டை திருடிச் சென்ற மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சிசிடிவி கேமரா காட்சிகளில் ஆட்டை திருடிச் செல்லும் நபரின் முகம் தெளிவாக பதிவாகியுள்ளது. ஆட்டின் உரிமையாளர் புகார் அளித்து 4 நாட்கள் கடந்தும் சம்பந்தப்பட்ட நபரை போலீசார் கண்டுபிடிக்காதது ஏன்? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
இதேபோன்று ஆடு திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், ஆடு திருட்டில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கால்நடை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
துப்பறிவாளன் மணி