வரி பாக்கி வைத்தால் குடிநீர் இணைப்பு கட்! தூத்துக்குடியில் 5 கட்டிடங்கள் மீது நடவடிக்கை.!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சியில் 2025–26-ம் ஆண்டு, அதாவது 31.03.2026 வரையிலான காலத்திற்கான சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்தாத வரி விதிப்பு தாரர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, நிலுவை வைத்துள்ள கட்டிடங்களில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா உத்தரவின்படியும், கிழக்கு மண்டல உதவி ஆணையரின் அறிவுரையின் படியும், கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட 24 மற்றும் 47-வது வார்டுகளில் உள்ள தெற்கு காட்டன் ரோடு மற்றும் வடக்கு ராஜா தெரு பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள் இன்று நடவடிக்கை மேற்கொண்டனர்.
இப்பகுதிகளில் 2018–19 முதல் 2023–24-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இருந்து சொத்து வரி செலுத்தாமல் நிலுவை வைத்திருந்த 5 கட்டிடங்கள் கண்டறியப்பட்டன. இக்கட்டிடங்களுக்கு ரூ.18 ஆயிரம் முதல் ரூ.69 ஆயிரம் வரை சொத்து வரி நிலுவை இருந்தது.
நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு முறையாக கால அவகாசம் வழங்கி அறிவிப்பு செய்யப்பட்டிருந்த நிலையில், வரி செலுத்தாததை தொடர்ந்து மாநகராட்சி அலுவலர்கள் 5 கட்டிடங்களின் குடிநீர் இணைப்புகளை துண்டித்தனர்.
மேலும், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்ட கட்டிடங்களுக்கான சொத்து வரி நிலுவைத் தொகையை 3 நாட்களுக்குள் செலுத்தாவிட்டால், நடைமுறையில் உள்ள விதிகளின்படி ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்களது கட்டிடங்களுக்கான சொத்து வரி, குடிநீர் கட்டணம், திடக்கழிவு மேலாண்மை வரி, பாதாள சாக்கடை கட்டணம் உள்ளிட்ட வரிகளை நடப்பு காலம் வரை செலுத்தியுள்ளனரா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். நிலுவைத் தொகை இருப்பின், அதனை உடனடியாக செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் இதர சட்டபூர்வ நடவடிக்கைகளை தவிர்க்குமாறு மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
துப்பறிவாளன் மணி