தூத்துக்குடியில் தனியார் உணவு விடுதிக்கு ரூ.50,000 அபராதம்.!

தூத்துக்குடியில் தனியார் உணவு விடுதிக்கு ரூ.50,000 அபராதம்.!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடிகால்கள், சிறுபாலங்கள் மற்றும் பிரதான மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் தனியார் உணவு விடுதி ஒன்று விதிமுறைகளுக்கு முரணாக, இயந்திரக் குழியுடன் அமைக்கப்பட்டிருந்த பிரதான மழைநீர் வடிகாலில் சமையல் மற்றும் உணவுக் கழிவுகளை நேரடியாக கலந்தது கள ஆய்வின்போது கண்டறியப்பட்டது.

இதன் காரணமாக சுமார் 100 மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கியிருந்தது. இதையடுத்து, மாநகராட்சி சார்பில் ஜெட்ராடு வாகனம் மூலம் அடைப்பு அகற்றப்பட்டு, வடிகால் சீரமைக்கப்பட்டது.

மேலும், விதிமுறைகளை மீறி செயல்பட்ட தனியார் உணவு விடுதிக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா, தெரிவிக்கையில், தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் செயல்படும் உணவு விடுதிகள், இதர தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் முறையான அனுமதியின்றி கழிவுநீர் மற்றும் உணவுக் கழிவுகளை மழைநீர் வடிகால்களில் நேரடியாக கலக்கவோ, பொதுவெளியில் உணவுக் கழிவுகளை கொட்டவோ கூடாது.

இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது பொது சுகாதாரச் சட்டம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான சட்ட விதிகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.