வழக்கறிஞரின் வித்தியாச முயற்சி... கிராமத்து இளைஞர்களை ஹீரோக்களாக்கிய ‘வெறித்தனம்’!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் பிரிஸ்டன் (23) வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். நீதிமன்றப் பணிகளுக்கு மத்தியில் கிடைக்கும் ஓய்வு நேரத்தை வீணாக்காமல், கிராமப்புற இளைஞர்களின் மறைந்திருக்கும் கலைத்திறமைகளை வெளிக்கொணரும் நோக்கில் குறும்படம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
தனது சொந்த செலவிலும் நண்பர்களின் ஒத்துழைப்புடனும் "வெறித்தனம்" (Verithanam) என்ற குறும்படத்தை உருவாக்கியுள்ளார். இதில் நடித்துள்ளவர்கள் அனைவரும் தருவைக்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சாதாரண இளைஞர்களே. திரைத்துறையில் எந்த அனுபவமும் இல்லாத அவர்களுக்கு நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் அரிய வாய்ப்பை இந்தக் குறும்படம் வழங்கியுள்ளது.
இதுகுறித்து., பிரிஸ்டன் கூறுகையில், "திரைத்துறையில் வாய்ப்புகள் கிடைக்காமல் பல திறமைகள் கிராமங்களிலேயே மறைந்து விடுகின்றன. அந்தத் திறமைகளை உலகிற்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். கிராமத்து இளைஞர்களுக்கும் திறமை இருக்கிறது என்பதை நிரூபிக்கும் முயற்சியாகவே இந்தக் குறும்படத்தை உருவாக்கியுள்ளோம்," என்றார்.
இந்தக் குறும்படம் வெளியானதிலிருந்து தருவைக்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. கிராமத்து இளைஞர்களின் இயல்பான நடிப்பும், அவர்களின் அர்ப்பணிப்பும் பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்று வருகிறது.
'வாய்ப்பு கிடைத்தால் கிராமத்து இளைஞர்களும் சாதிப்பார்கள்' என்ற நம்பிக்கையை எடுத்துரைக்கும் இந்த முயற்சி, பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
குறிப்பு: "வெறித்தனம்" குறும்படத்தை One Man Entertainment யூடியூப் சேனலில் கண்டு களிக்கலாம்.
துப்பறிவாளன் மணி