தூத்துக்குடியில் தொடர் போராட்டத்திற்கு தயாராகும் உப்பு உற்பத்தியாளர்கள்.!

தூத்துக்குடியில் தொடர் போராட்டத்திற்கு தயாராகும் உப்பு உற்பத்தியாளர்கள்.!

தூத்துக்குடி: தூத்துக்குடி கடற்கரையை ஒட்டிய முள்ளக்காடு, கோவளம், பசுவந்தரை, தன்பாடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிறிய அளவிலான உப்பள நிலங்களை கப்பல் கட்டும் தளத்திற்காக கையகப்படுத்தும் திட்டத்திற்கு எதிராக, உப்பு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் மற்றும் மீனவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக சப்-கலெக்டர் பிரபு தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், உப்பு உற்பத்தியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். தொடர்ந்து, முள்ளக்காடு பேருந்து நிறுத்தம் அருகே காத்திருப்பு போராட்டமும் நடைபெற்றது. 

இதில் உப்பு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள், மீனவர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

இதையடுத்து, அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், தங்களது கோரிக்கைகளுக்கு அரசியல் கட்சிகளின் ஆதரவை திரட்டும் முயற்சியில் உப்பு உற்பத்தியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தை தீவிரப்படுத்தும் நோக்கில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர்.

அதன்படி, ஏற்கனவே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில், தற்போது சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் சூழலில், தேமுதிக பொதுச்செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான பிரேமலதா விஜயகாந்தை சென்னை சென்று நேரில் சந்தித்தனர்.

தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், உப்பு உற்பத்தியாளர் சங்க செயலாளர் சேகர், முகேஷ் சண்முகவேல், பாலசுப்பிரமணியன் ஆகியோர் உப்பளங்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து விளக்கி, கோரிக்கை மனுவை வழங்கினர்.

உற்பத்தியாளர்களின் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட பிரேமலதா விஜயகாந்த், ஏற்கனவே தூத்துக்குடி உப்பளங்களை நேரில் பார்வையிட்டுள்ளதாகவும், உப்பு உற்பத்தியாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவாக இருந்து, அவர்களின் போராட்டத்திற்கு துணை நிற்பதாக உறுதியளித்ததாக உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.