பிளஸ் டூ மாணவி கொலை: மாணவியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற வந்த ஆதவ் அர்ஜுனாவுக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு.!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு காட்டுப் பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். கொலையாளிகளை 10 தனி படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வரும் நிலையில் மாணவியின் பெற்றோரை சந்தித்து அரசியல் கட்சியினர் ஆறுதல் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று காலை தூத்துக்குடி எம்பி கனிமொழி ஆறுதல் கூற வந்த போது கிராம மக்கள் கனிமொழியை சூழ்ந்து கொண்டு முற்றுகையிட்டனர். அதனை தொடர்ந்து, மதியம் தமிழக வெற்றி கழகம் சார்பில் தேர்தல் மேலாண்மை செயலாளர் ஆதவ் அர்ஜுனா பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூற வந்தார்..
அப்போது கிராம மக்கள் யார் இவர்? எதற்காக இங்கே வந்துள்ளார்.. நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொழுது எங்கே சென்றார் மாணவியின் மரணத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என ஆவேசம் அடைந்தனர்.
அதன் பின்னர், அந்த சிறுமியின் அத்தை சுப்புலட்சுமி என்பவர் ஏற்கனவே துக்கத்தில் இருக்கிறோம். ஏன் அரசியல் கட்சிகள் வந்து தொடர்ந்து தொந்தரவு செய்கிறீர்கள். நீங்கள் (அரசியல்வாதிகள்) வருவது பிடிக்கவில்லை. எங்கள் குழந்தை கடந்த கோலத்தினை பார்த்து எங்களால் அதிலிருந்து மீள முடியவில்லை. அவர் பெற்றோர் நொந்து போய் இருக்கின்றனர். அவர்களை நிம்மதியாக விடுங்கள். நீங்கள் வந்து பேட்டி கொடுத்துவிட்டு போய்விடுவீர்கள் ஆனால் காலம் பூரம் வேதனை படப்போவது அவளின் தாய் தான். நாங்க காசு, பணமோ பதவியோ எதிர்பார்க்கவில்லை. முக்கியமா கட்சிக்காரர்களை நாங்கள் நம்பவே இல்லை என்று கூறி அந்த பெண்மணி மயங்கிவிழும் நிலைக்கு வந்தார். பின்னர் ஆதவ் அர்ஜுனா மற்றும் அங்கிருந்தவர்கள் அவரை அமர வைத்தனர்..
பின்னர், அவரது தாய் தொடர்ந்து கண்ணீர் விட்டு ஆழத் தொடங்கினார்.
இதைத் தொடர்ந்து ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை வெளியே இருக்கும்படி கேட்டுக் கொண்டார்.
பின்னர், 20 நிமிடம் கழித்து வெளியே வந்த அவர் அங்கு ஊர் மக்கள் கூச்சலிட்டதால் அங்கிருந்து தனது ஆதரவாளர்களுடன் கிளம்பிச் சென்ற போது சில பெண்கள் ஆதவ் அர்ஜுனாவுடன் போட்டோ எடுத்தும் மகிழ்ந்தனர்..
மேலும், தலைவர் விஜய் மாவட்டத்திற்கு வருகை தரும் பொழுது மாணவியின் பெற்றோரை சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
செய்தியாளர் மு.மணிகண்டன்