ஓட்டப்பிடாரம் ராணுவ வீரருக்கு நெல்லை ரயில் நிலையத்தில் பிரமாண்ட வரவேற்பு.!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பேரூரணி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (53), விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர், தூத்துக்குடியில் உள்ள ஸ்பிக் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், தனது 21-வது வயதில் ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆர்வத்தில் திருச்சியில் நடைபெற்ற ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றார்.
இதையடுத்து 1994-ம் ஆண்டு சிப்பாயாக தனது ராணுவப் பணியை தொடங்கினார்.
நாசிக்கில் உள்ள ராணுவ பயிற்சி முகாமில் பயிற்சி பெற்ற சுப்பிரமணியன், ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தான், அசாம், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணியாற்றியுள்ளார். பீரங்கி மற்றும் பல்வேறு வகையான துப்பாக்கிகளை கையாளுதல் உள்ளிட்ட பல்வேறு ராணுவப் பயிற்சிகளைப் பெற்ற அவர், பின்னர் ராணுவ பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார்.
ராணுவத்தில் பணியாற்றிய காலத்தில் கார்கில் போர், ஆபரேஷன் விஜய், ஆபரேஷன் பராக்ரம், ஆபரேஷன் மேக்தூத், ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ராணுவ நடவடிக்கைகளில் பங்கேற்றுள்ளார்.
ராணுவத்தின் ஏர் டிஃபென்ஸ் பிரிவில் சுமார் 32 ஆண்டுகள் பணியாற்றி தனது சேவையை நிறைவு செய்துள்ளார்.
பணி நிறைவு செய்து சொந்த ஊர் திரும்பிய கேப்டன் சுப்பிரமணியனுக்கு திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாலைகள் மற்றும் சந்தன மாலைகள் அணிவித்தும், கிரீடம் அணிவித்தும், பொக்கே வழங்கியும் அவரை உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்றனர்.
தொடர்ந்து தனது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரை சந்தித்த கேப்டன் சுப்பிரமணியன், ஆனந்தக் கண்ணீருடன் அவர்களை அரவணைத்துக் கொண்டார். இந்த நெகிழ்ச்சியான தருணம் அங்கு கூடியிருந்தவர்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் சுப்பிரமணியன், 1994-ம் ஆண்டு ராணுவத் தேர்வில் கலந்து கொண்டு பணியில் சேர்ந்ததாகவும், தனது தாய், தந்தையின் ஊக்கமும், மனைவியின் ஆதரவும் காரணமாக 32 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்ற முடிந்ததாகவும் தெரிவித்தார்.
சிப்பாய் பணியில் இருந்து உயர் பதவிக்கு வருவது மிகவும் கடினமானது என்றும், தான் சிப்பாயாக ராணுவத்தில் சேர்ந்து தற்போது கேப்டன் பதவி வரை உயர்வு பெற்று ஓய்வு பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
1997-ம் ஆண்டு கார்கில் போரில் தொடங்கி பல்வேறு போர்கள் மற்றும் ராணுவ நடவடிக்கைகளில் பங்கேற்றதாக தெரிவித்த அவர், தற்போது நடைபெறும் போர்களில் ரேடார் மற்றும் ட்ரோன்களின் பங்கு மிகவும் முக்கியமானதாக உள்ளதாக குறிப்பிட்டார்.
ஆபரேஷன் சிந்தூரின்போது நடைபெற்ற ட்ரோன் தாக்குதல்களை எதிர்கொள்வதில் ராணுவத்தின் ஏர் டிஃபென்ஸ் பிரிவு முக்கிய பங்கு வகித்ததாகவும், அதில் தானும் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் கேப்டன் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மேலும், தற்போதைய தலைமுறையினர் அக்னிவீரராக வேண்டும் என்ற ஆர்வத்தில் இருப்பது வரவேற்கத்தக்கது என்றும், அனைவரும் அக்னிவீரர் பணிக்கு முயற்சி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அக்னிவீரர் பணியில் இருந்து வெளியே வந்தாலும் பல்வேறு துறைகளில் நல்ல வேலைவாய்ப்புகளும், பதவிகளும் கிடைக்கும். கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது. எனவே இளைஞர்கள் அனைவரும் முயற்சி எடுக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
துப்பறிவாளன் மணி