தமிழின் பெருமையைப் பறைசாற்றிய தமிழன்டா கலைக்குழு!

தமிழின் பெருமையைப் பறைசாற்றிய தமிழன்டா கலைக்குழு!

தூத்துக்குடி: தமிழர்களின் பண்பாடு, கலை மற்றும் நாகரிகத்தை பறைசாற்றும் வகையில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி முன்னெடுப்பில் தூத்துக்குடியில் 5-வது நெய்தல் கலைத் திருவிழா நடைபெற்று வந்தது.

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மைதானத்தில் கடந்த 14-ஆம் தேதி தொடங்கிய இந்த மூன்று நாள் கலைத் திருவிழா, 16-ஆம் தேதி வரை இன்றுடன் முடிவடைகிறது.

இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட நாட்டுப்புற மற்றும் மண்ணின் கலைஞர்கள் பங்கேற்று தங்களது பாரம்பரிய கலைத் திறமைகளை வெளிப்படுத்தினர்.

கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், பறையாட்டம், குச்சியாட்டம், துடும்பாட்டம், ஜிம்பளா மேளம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாட்டுப்புற மற்றும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவின் முதல் நாளில் கணேஷ்கா சிலம்பம், தேவராட்டம், பெரிய மேளம், தேன்மொழி ராஜேந்திரனின் கரகம், சேவா ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இரண்டாம் நாளில் கணியான் கூத்து, தப்பாட்டம், கும்மி–கோலாட்டம் மற்றும் கேபர் வாசுகியின் மெல்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் தமிழன்டா கலைக்குழு, உவரி களியல் குழு, ஸ்டார் ஜிக்காட்ட கலைக்குழு ஆகியோரின் கலை நிகழ்ச்சிகளுடன், குஜராத்தைச் சேர்ந்த சித்தி கோமா நடனமும் இடம்பெற்றது. நெய்தல் கலைத் திருவிழாவின் மற்றொரு சிறப்பம்சமாக, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பாரம்பரிய உணவு வகைகளை பொதுமக்கள் அறிந்து ரசிக்கும் வகையில் 30-க்கும் மேற்பட்ட உணவு அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன.

மூன்று நாட்களிலும் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

இதில், தூத்துக்குடியைச் சேர்ந்த தமிழன்டா கலைக்குழுவினர், தங்களது பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் மூலம் நெய்தல் கலைத் திருவிழாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர்.

மாடாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளை சிறப்பாக அரங்கேற்றியதுடன், நாட்டுப்புறப் பாடல்களையும் உற்சாகமாகப் பாடி அசத்தினர்.

அவர்களின் ஒவ்வொரு நிகழ்ச்சியும் தமிழர்களின் பாரம்பரியம், பண்பாடு மற்றும் மண்ணின் கலைச் சிறப்பை எடுத்துரைக்கும் வகையில் அமைந்திருந்தது.

தமிழன்டா இயக்கத்தின் நிறுவனர் ஜெகஜீவன், “தமிழ். தமிழ்.” என்ற உணர்வோடு தமிழையும், தமிழர்களின் பாரம்பரிய கலைகளையும் போற்றும் வகையில் தொடர்ந்து பல்வேறு பணிகளை முன்னெடுத்து வருகிறார்.

மறைந்து வரும் நாட்டுப்புறக் கலைகளை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் தமிழன்டா கலைக்குழுவினர் மேற்கொண்டு வரும் இந்தப் பணி, தமிழர்களின் பாரம்பரியத்தை பாதுகாக்கும் முயற்சியாக அமைந்துள்ளது.