தூத்துக்குடி நெய்தல் திருவிழாவில் சோகம்: கலைக்குழு ஒருங்கிணைப்பாளர் திடீர் உயிரிழப்பு.!

தூத்துக்குடி நெய்தல் திருவிழாவில் சோகம்: கலைக்குழு ஒருங்கிணைப்பாளர் திடீர் உயிரிழப்பு.!

தூத்துக்குடி: கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே உள்ள ஆண்டிப்பொற்றைப் பகுதியைச் சேர்ந்தவர் ரவி இவரது மகன் பிரசாந்த் (33). திருமணமாகாத இவர், குமரி கானகப் பறவைகள் கலைக்குழுவின்  ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்தார்.

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வரும் நெய்தல் கலைத் திருவிழாவில் தனது குழுவினருடன் பங்கேற்பதற்காக பிரசாந்த் தூத்துக்குடி வந்திருந்தார். நேற்று கலை நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக தயாராகிக் கொண்டிருந்த அவர், அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தபோது எதிர்பாராதவிதமாக திடீரென கீழே சரிந்து விழுந்தார்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், பிரசாந்த் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக தென்பாகம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெய்தல் திருவிழாவில் கலை நிகழ்ச்சிக்காக வந்த கலைக்குழு ஒருங்கிணைப்பாளர் உயிரிழந்த சம்பவம், சக கலைஞர்கள் மற்றும் விழா ஏற்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.